அம்பலாங்கொட பகுதி வியாபாரி ஒருவரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய அம்பலாங்கொட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அடங்கலான நால்வர் உடனடியாக அமுலாகும் வகையில் இடமாற்றப்பட்டுள்ளனர்.
மேற்படி பொலிஸாரின் தாக்குதல் காரணமாக அம்பலாங்கொட பகுதி வியாபாரியான எச். ஜி. அநுர கிரிசாந்த காயமடைந்து பலப்பிட்டிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் வகையில் பொலிஸ் பொறுப்பதிகாரி அடங்கலான 4 பொலிஸார் இடமாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். பொலிஸ் பொறுப்பதிகாரி அநுர இரத்தினபுரிக்கும், பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவர் ஹம்பாந்தோட்டைக்கும், மற்றொருவர் பதுளைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் எல்பிட்டிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்பின் கீழ் முன்னெடுக்கப்படுகிறது.
தனது சகோதரியுடன் மரண வீடொன்றுக்குக் காரில் சென்ற மேற்படி வியாபாரியை களுவடுமுல்ல பகுதியில் வழிமறித்து பொலிஸார் அவர் மதுபோதையில் வாகனம் ஓட்டுவதாகவும் காரில் கஞ்சா கடத்துவதாகவும் குற்றஞ்சாட்டி விசாரித்துள்ளனர். பின்னர் அவரை கொடூரமாகத் தாக்கியுள்ளனர். ஆனால் காரில் கறிவேப்பிலை கட்டுகளே எடுத்துச் செல்லப்பட்டதாக வியாபாரியின் சகோதரி பொலிஸில் முறையிட்டிருந்தார்.
இதன்படி சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த அம்பலாங்கொட உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டது. இந்த குழுவின் அறிக்கைப்படி 4 பொலிஸாரும் இடமாற்றப்பட்டனர்.