இலங்கையிலுள்ள தனியார் மருந்தகங்களில் மருந்துப் பொருட்களை வழங்கவென பயன்படுத்தப்படும் சுமார் 25 மில்லியன் பொலித்தீன் உறைகளும் கழிவுப் பொருட்களாக வருடாந்தம் சுற்றாடலில் சேர்வதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
இவ்வாறு கழிவுப் பொருட்களாக சுற்றாடலில் சேரும் பொலித்தீன் உறைகள் டெங்கு நுளம்புகளின் பெருக்கத்திற்கும் சுற்றாடல் பிரச்சினைகளுக்கும் பாரிய பங்களிப்பு செய்து வருவதும் அந்த ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டிருக்கின்றது.
இதனை அடிப்படையாக வைத்து சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, மருந்துப் பொருட்களை வழங்கவென பொலித்தீன் உறைகளைப் பாவிப்பதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் கடதாசி உறைகளைப் பயன்படுத்துமாறும் தனியார் மருந்தக உரிமையாளர்களிடம் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்.
நாட்டில் சுமார் 6000 தனியார் மருந்தகங்கள் உள்ளன. இவற்றில் நுகர்வோருக்கு மருந்துப் பொருட்களை வழங்கவென வருடத்திற்கு சுமார் 25 மில்லியன் பொலித்தீன் உறைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை கழிவுப் பொருளாக சுற்றாடலில் சேருகின்றன. இது டெங்கு நுளம்புகளின் பெருக்கத்திற்குப் பாரிய பங்களிப்பு செல்வதுடன், சுற்றாடலுக்கும் பெரும் பிரச்சினையாக உள்ளது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
தனியார் மருந்தகங்களில் மருந்துப் பொருட்களை நுகர்வோருக்கு வழங்கவென பொலித்தீன் உறைகள் பயன்படுத்தப்படுவது தொடர்பாக சுற்றாடல் அமைச்சரிடம் கலந்துரையாடி இப்பிரச்சினைக்கு தீர்வு காணத் திட்டமிட்டிருக்கின்றேன் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
மருந்துப் பொருட்களை களஞ்சியப்படுத்துவது, சந்தைப்படுத்துவது தொடர்பான ஒழுங்குமுறைகள் குறித்து கொழும்பிலுள்ள 1500 தனியார் மருந்தக உரிமையாளர்களுக்கு அறிவூட்டும் செயலமர்வின் போதே அமைச்சர் மேற்படி தகவல்களைத் தெரிவித்தார்.