கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை வடக்கின் வசந்தம் 180 நாள் வேலைத் திட்டத்தில் துரிதமாகப் புனரமைக்கவென அரசாங்கம் 160 கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளது. இந்த நிதி தேசத்தைக் கட்டியெழுப்பும் அமைச்சு, வட மாகாண சபை மற்றும் அந்தந்தத் திணைக்களங்கள் ஆகியவற்றின் ஊடாக ஒதுக்கப்பட்டிருப்பதாக முல்லைத்தீவு அரசாங்க அதிபரும், கிளிநொச்சி பதில் அரசாங்க அதிபருமான இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.
இந்நிதி ஊடாக 180 நாட்களுக்குள் மேற்கொள்ளப்பட வேண்டிய சகல புனரமைப்பு வேலைகளையும் தாமதிமின்றி துரிதகெதியில் ஆரம்பிப்பதற்குத் தேவையான சகல அறிவுறுத்தல்களையும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ வழங்கியுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிதி ஒதுக்கீடு இவ்விரு மாவட்டங்களினதும், கல்வி, சுகாதாரம், மின்சாரம் பொது வசதிகள் உட்பட சகல துறைகளையும் மேம்படுத்தவென மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். இதன்படி இவ்விரு மாவட்டங்களினதும் புனரமைப்புக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் நிதி விபரம் வருமாறு, சுகாதார துறைக்கு 487.4 மில்லியன், மின்சாரத்திற்கு 451 மில்லியன், வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு கீழான வீதிகளுக்கென 122. 7 மில்லியன், வீதி அபிவிருத்தித் திணைக்களத்திற்குக் கீழான வீதிகளுக்கு 150 மில்லியன், உள்ளூராட்சி மன்றங்களுக்குக் கீழான உள்வீதிகளுக்கு 130. 12 மில்லியன், கல்வி துறைக்கு 90 மில்லியன், கமநல சேவைக்கு 51 மில்லியன், நீர்ப்பாசனத்துறைக்கு 65 மில்லியன், விவசாய அபிவிருத்திக்கு 36.3 மில்லியன், நன்னீர் மீன்வளப்பு துறைக்கு 26.2 மில்லியன், கூட்டுறவு துறைக்கு 37 மில்லியன், மாவட்டங்களின் நிர்வாக கட்டடத்திருத்த வேலைகளுக்கென 29.5 மில்லியன், பிரதேச செயலக கட்டிட திருத்த வேலைகளுக்கென 22.7 மில்லியன் என்றபடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பு துறைக்கென 11.6 மில்லியனும், தென்னை அபிவிருத்திக்கென 5.8 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்திற்கென மகநெகும திட்டத்தின் கீழ் 20 மில்லியனும், தளபாடக் கொள்வனவுக்கென 12 மில்லியனும், சிறுவர் பராமரிப்புக்கு 6.6 மில்லியனும் உள்ளூராட்சி கட்டிடத் திருத்தத்திற்கு 12 மில்லியனும், விவசாயத் திணைக்களத்திற்கு 6 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளது.