சனல் 4 தொலைக்காட்சி விவகாரத்தையடுத்து போர்க்குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று எழுந்துள்ள கோரிக்கைகளை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
“இலங்கையில் போர்க்குற்றச்சாட்டு தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை விசாரணை நடத்தவேண்டும் என்ற நோர்வேயின் கோரிக்கையையும் செனல் 4 விவகாரம் குறித்து இலங்கை சுயாதீன விசாரணை நடத்தவேண்டும் என ஐ.நா.வின் நிபுணர் ஒருவர் வலியுறுத்தியுள்ளதையும் முழுமையாக நிராகரிக்கின்றோம்” என்று மனித உரிமைகள் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
“மனித உரிமைகள் அமைச்சர் என்ற வகையில் செனல் 4 விவகாரம் தொடர்பில் இராணுவத் தளபதியிடம் விசாரித்தேன். இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் தனிப்பட்ட விசாரணை ஒன்றை நடத்தியதாகவும் அதன்மூலம் இவ்வாறான சம்பவம் ஒன்று இடம்பெறவில்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ தளபதி எனக்கு அறிவித்துள்ளார்” என்றும் குறிப்பிட்டார்.
“எதிர்வரும் 13 ஆம் திகதி நான் ஜெனீவாவுக்குச் சென்று செனல் 4 விவகாரம் தொடர்பில் சுயாதீன விசாரணையைக் கோரியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் பிலிப்ஸ் அல்ஸ்டனைச் சந்தித்து இலங்கை அரசாங்கத்தின் ஆட்சேபனையை வெளியிடவுள்ளேன்” என்றும் அமைச்சர் சமரசிங்க கூறினார். இலங்கையில் போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை விசாரணை நடத்தவேண்டிய தேவை உள்ளதாக நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் அண்மையில் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு கடும் அதிருப்தியை வெளியிட்டிருந்தது. அதேவேளை, செனல் 4 விவகாரம் தொடர்பில் இலங்கை சுயாதீன விசாரணை நடத்தவேண்டும் என்று ஐ.நாவின் நிபுணர் பிலிப் அல்ஸ்டன் கோரிக்கையொன்றை விடுத்துள்ளார். இந்நிலையில் இந்த விவகாரங்கள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் மஹிந்த சமரசிங்க மேற்கண்ட விடயங்களை குறிப்பிட்டார்.