ஜப்பான் நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றிப் பெற்று புதிய பிரதமராக பொறுப்பேற்கவுள்ள யுகியோ கோடோயாமா மிகவும் எளிமையானவர் என்று கூறப்படுகிறது. ஜப்பானில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஜப்பான் ஜனநாயகக் கட்சி அமோக வெற்றி பெற்றது. உலகக் போருக்குப் பின்னர் லிபரல் ஜனநாயகக் கட்சியைத் தவிர வேறோரு கட்சி தனிப் பெரும்பான்மை பெற்றதில்லை என்ற வரலாற்றை, இத்தேர்தல் மூலம் ஜப்பான் ஜனநாயகக் கட்சி முடிவுக்கு கொண்டு வந்தது.
இதனால் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, அக்கட்சியின் தலைவரும், பிரதமருமான டாரோ அஸோ பதவி விலகியுள்ளார். இந்நிலையில் புதிய பிரதமராக பொறுப்பேற்கவுள்ள ஜப்பான் ஜனநாயக கட்சித் தலைவர் யுகியோ, மிகவும் எளிமையானவர் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து யுகியோவின் மனைவி மியூகி, பிரபல பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், தனது கணவர் ஓர் யதார்த்தவாதி என்றும் அவர் மிகவும் எளிமையானவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். பார்ப்பதற்கு ஜப்பான் நாட்டவரை போல் அல்லாமல் வெளிநாட்டவரை போல் இருந்தாலும், அவர் மக்களோடு மக்களாக இருப்பவர். அவரை யாரும் எளிதில் சந்தித்து பேச முடியும் என்றும் மியூகி கூறினார். மியூகி, முன்னாள் பிரபல நடிகையாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.