வன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை ராணுவம் நடத்திய தாக்குதல்களின் போது இடம்பெற்ற போர்க் குற்றங்கள் குறித்து அமெரிக்காவின் போர்க் குற்றங்கள் தொடர்பான அலுவலகம் அறிக்கை ஒன்றைத் தயாரித்து வருகின்றது. செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி அந்த அறிக்கை வெளியிடப்படும் எனத்தெரிகிறது.
இறுதிப் போரின்போது 20 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளக அறிக்கைகளை மேற்கோள்காட்டி லண்டனில் இருந்து வெளிவரும் ‘ரைம்ஸ்’ நாளேடு செய்தி வெளியிட்டிருந்தது.
ஏப்ரல் மாதம் இறுதிவரை 6 ஆயிரத்து 500 பொதுமக்கள் உயிரிழந்தமை ஐக்கிய நாடுகள் சபையால் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் மே மாதம் 19 ஆம் நாள் வரை நாள்தோறும் சுமார் ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபையின் ரகசிய உள்ளக அறிக்கைகள் தெரிவிப்பதாக ‘ரைம்ஸ்’ கூறியது. உயிரிழப்புக்கள் அநேகமாக ராணுவத்தின் எறிகணைத் தாக்குதல்களாலேயே ஏற்பட்டன எனவும் ‘ரைம்ஸ்’ நாள் ஏடு கூறியிருந்தது.
கண்களும் கைகளும் கட்டப்பட்டு, ஆடைகள் களையப்பட்ட தமிழ்க் கைதிகள் படையினரால் சுட்டுக்கொல்லப்படும் காணொலிக் காட்சிகள் அண்மையில் பிரித்தானியாவின் ‘சனல் – 4’ நிறுவனத்தால் வெளியிடப்பட்டிருந்தது. இலங்கையின் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு இந்தக் காணொலியை வழங்கியிருந்தது. இவை அனைத்தும் சிங்களப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கான உறுதியான சான்று ஆதாரங்களாக அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களால் சுட்டிக்காட்டப்படுகின்றது.
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆராய்வதற்காக கடந்த மே மாதம் 26, 27 ஆம் நாட்களில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சிறப்பு கூட்டத் தொடர் கூட்டப்பட்டது. எனினும் இதில் இலங்கைக்கு எதிராக எந்தவித தீர்மானங்களும் நிறைவேற்றப்படவில்லை. இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய பலம் வாய்ந்த நாடுகளின் துணையுடன் தனக்கு எதிரான முயற்சியை கொழும்பு வெற்றிகரமாக தடுத்திருந்தது.
போரின் கடைசிக் காலப் பகுதியில் ராணுவத்தினர் மற்றும் விடுதலைப் புலிகளால் பெருமளவில் மனித உரிமை மீறல்கள் மேற்கொள்ளப்பட்டன எனக் குற்றம் சாட்டிய 90 அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் இந்த கூட்டத் தொடருக்கு அழைப்பு விடுத்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று விடுக்கப்படும் கோரிக்கைகளை ஏற்க அரசு தொடர்ந்து மறுத்து வருகின்றது. போரில் வெற்றி பெற்றவர்களுக்கு எதிராக அத்தகைய விசாரணைகள் நடத்தப்படுவதில்லை என அது கூறிவருகின்றது. இத்தகைய நிலையிலேயே இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து அமெரிக்க போர்க் குற்றங்கள் தொடர்பான அலுவலகம் அறிக்கை தயாரித்து வருகின்றது.
இந்த அறிக்கையில் இறுதிப் போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்த பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ராணுவம் மற்றும் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் தொடர்பாக ஆதாரபூர்வமான பல தகவல்களை இந்த அறிக்கை வெளியிடும் என மனித உரிமை ஆர்வலர்களும் ஊடகவியலாளர்களும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.