சரணடைந்த, கைதான புலி உறுப்பினர்களின் புனர்வாழ்வு நடவடிக்கைக்கு 20 நிலையம்

புலிகள் இயக்கத்திலிருந்து பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்த மற்றும் மனிதாபிமான நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்டவர்களின் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கென 20 புனர்வாழ்வு நிலையங்கள் புதிதாக நிறுவப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் தயாரத்னாயக்க நேற்றுத் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கின் பல்வேறு பிரதேசங்களில் இந்த 20 புனர்வாழ்வு நிலையங்கள் நிறுவப்படவுள்ளன.

ஐநூறு பேர் வீதம் 20 நிலையங்களில் இவர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்படவுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஷேட பணிப்பின் பேரில் தற்பொழுது பத்தாயிரம் பேருக்கும் உச்சகட்ட புனர்வாழ்வு வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். உறுப்பினர்களின் தனித்தனி விபரங்களை சேகரிக்கும் நடவடிக்கைகள் தற்பொழுது பூர்த்தி செய்யப்பட்டுள்ளது என்றும் இத ற்கு சுமார் மூன்று வாரங்கள் செலவிடப் பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

10 ஆயிரம் பேர்களில் 1777 பெண் உறுப்பினர்களும 565 பாடசாலை பருவ மாணவர்களும் அடங்குவர். இவர்களில் பாடசாலை செல்லும் வயதுடைய மாணவர்கள் தமது கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சகல செயற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் தெரிவித்தார்.

தற்பொழுது 10 ஆயிரம் பேர்களும் 12 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவற்றில் நான்கு பாடசாலைகளாகும். இந்த பாடசாலைகளை கற்றல் நடவடி க்கைகளுக்காக வெகுவிரைவில் பொறு ப்புக் கொடுக்க வேண்டியுள்ளதால் தற்காலிகமாக 5 முகாம்கள் நிறுவப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த இவர்களது செயற்பாடுகளையும், சிந்தனைகளையும் முழுமையாக மாற்றியமைத்து சமாதான சிந்தனையுடன் வாழ தேவையான வகையில் உச்சகட்ட புனர்வாழ்வு வழங்குவதே பிரதான நோக்கம் என்றும் மேஜர் ஜெனரல் தயா ரத்னாயக்க குறிப்பிட்டார்.

பெருந்தொகையானவர்களுக்கு இது போன்ற புனர்வாழ்வு வழங்கப்படுவது உலகிலேயே இதுவே முதற் தடவை என்று குறிப்பிட்ட அவர் பயங்கரவாதத்தை முறியடித்து அரசாங்கம் முன்னெடுத்து வரும் இதுபோன்ற திட்டங்களை பாராட்டும் வகையில் உலகின் பல நாடுகள், முன்னணி அமைப்புக்கள் ஒத்துழைப்புக்களை வழங்க முன்வந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *