சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ள புதிய டெஸ்ட் தரவரிசையின்படி இலங்கை அணி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. முன்னதாக சம புள்ளிகளைப் பெற்று இந்தியாவுடன் இரண்டாவது இடத்தைப் பகிர்ந்து கொண்டிருந்த இலங்கை, நியூசிலாந்துடனான டெஸ்ட் தொடரை 2-0 எனும் விகிதத்தில் வெற்றியீட்டியதன் மூலம் மேலதிகமாக ஒரு புள்ளியைப் பெற்று இரண்டாம் ஸ்தானத்தை அடைந்துள்ளது.
ஐ.சி.சி.யின் புதிய டெஸ்ட் தரவரிசையின்படி 122 புள்ளிகளைப் பெற்றுள்ள தென்னாபிரிக்கா தொடர்ந்தும் முதலாம் இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது. இலங்கை 120 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்திலும் 119 புள்ளிகளுடன் இந்தியா மூன்றாம் இடத்திலும் காணப்படுகின்றன.
இதேவேளை, கிரிக்கெட் விளையாட்டில் முடிசூடா மன்னானாகக் கருதப்பட்ட அவுஸ்திரேலிய அணி நீண்ட காலத்துக்குப் பின் 4 ஆம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. அண்மையில் இங்கிலாந்து அணியுடன் இடம்பெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடரின் தோல்வியே அவுஸ்திரேலிய அணி பின்வரிசைக்குச் செல்லக் காரணமாகும்.
இலங்கை அணி எதிர்வரும் டெஸ்ட் போட்டிகளில் திறமையாக விளையாடி தொடர் வெற்றிகளை ஈட்டும் பட்சத்தில் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தைப் பிடிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.