லிபியாவின் 40ஆவது சுதந்திரதினக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்காக நேற்று அந்நாட்டுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.
லிபியத் தலைவர் கேர்னல் முஅம்மர் அல்கடாபியின் அழைப்பின் பேரில் அங்கு சென்றுள்ள ஜனாதிபதியை அந்நாட்டின் திட்டமிடல் அமைச்சர் அப்துல் ஹபீத் அல்-ஸ்லாட்னி திரிபோலி நகரிலுள்ள மடிகா விமானநிலையத்தில் வரவேற்றார். இந்த நிகழ்வில் எகிப்துக்கான இலங்கைத் தூதுவர் அன்ஸாரும் கலந்துகொண்டார்.
ஜனாதிபதி அண்மையில் லிபியாவுக்குச் சென்றிருந்தபோது இரு நாடுகளுக்குமிடையில் இணக்கம் காணப்பட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அந்நாட்டு உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவாரென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விழாவில் பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும் கலந்துகொள்ளவுள்ளதோடு அவர்களுடனும் ஜனாதிபதி பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, லிபியாவின் 40ஆவது சுதந்திரதின நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த விசேட குழுவொன்றும் அங்கு சென்றுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.