நோர் வேக்கு விஜயம் செய்துள்ள ஐ.நாவின் செயலாளர் பான் கீ மூன், இலங்கை விவகாரம் தொடர்பில் அந்நாட்டின் பிரதமர் ஜோன் ஸ்ரோடன் பேர்க் மற்றும் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும் இலங்கைக்கான முன்னாள் சமாதானத் தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் ஆகியோரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். நேற்றுக் காலை இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. காலநிலை மாற்றம் குறித்து ஆராய்வதற்காக இருநாள் விஜயமொன்றை மேற்கொண்டுள்ள பான் கீ மூனுக்கு நோர்வேயின் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் இலங்கை விவகாரம் குறித்து எடுத்துக் கூறியுள்ளார். இச் சந்திப்பினையடுத்து ஐ.நா.வின் செயலாளர் பான் கீ மூனும் நோர்வேயின் பிரதமர் ஜோன் ஸ்ரோடன் பேர்க்கும் இணைந்து செய்தியாளர் மாநாடொன்றினை நடத்தினர்.
இந்தச் செய்தியாளர் மாநாட்டில் இலங்கை குறித்து ஐ.நா.வின் செயலாளர் கருத்து தெரிவிக்கையில், இலங்கை விவகாரம் தொடர்பில் இணைத்தலைமை நாடுகளுடன் இணைந்து ஐ.நா. பணியாற்றி வருகின்றது. நோர்வேயும் இதில் பங்காற்றி வருகின்றது. சர்வதேச சட்டங்களை இலங்கை மீறக்கூடாது. மனித உரிமை நியமனங்களின் அடிப்படையில் இலங்கை அரசாங்கம் செயற்பட வேண்டும். இலங்கை விவகாரம் தொடர்பில் அந்த நாட்டின் ஜனாதிபதியுடன் நான் தொடர்பு கொண்டுள்ளேன். தொலைபேசியில் நான் பல தடவை அவருடன் பேசியுள்ளேன். இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வினை உள்ளடக்கிய அரசியல் ர்வு முன்வைக்கப்பட வேண்டும். இலங்கையில் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ள போதும் அரசியல்ரீதியான தீர்வு வழங்கப்படவில்லை. எனவே இவ்விடயத்தில் இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவில் இந்தச் சந்திப்பை நடத்திய ஐ.நா.வின் செயலாளர் பான் கீ மூன், காலநிலை மாற்றம் குறித்து ஆராய்வதற்காக நேற்று நோர்வேயின் வடதுருவப் பகுதிக்கு விஜயம் செய்துள்ளார். இன்று அவர் மீண்டும் அமெரிக்கா திரும்பவுள்ளார்.