லொக்கர் பி விமானக் குண்டு வெடிப்பின் குற்றவாளி விடுதலையானமைக்கும் லிபிய அரசாங்கத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லையென பிரிட்டிஷ் அரசாங்கம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
லிபியாவுடன் எண்ணெய்வள ஒப்பந்தத்தில் பிரிட்டிஷ் கைச்சாத்திட்ட பின்னர் இவர் விடுதலையானதாக அமெரிக்கா உட்பட பல நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன. இதற்குப் பதிலளிக்கும் வகையில் பிரிட்டிஷ் அரசாங்கம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
லொக்கர் பி விமானக் குண்டு வெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட மொஹமட் அல்மெஹ்ராஹி ஒரு புற்று நோயாளி. இவர் இன்னும் சில மாதங்களில் மரணமடைவார் என வைத்தியர்கள் சான்றிதழ் வழங்கியுள்ளனர். இவரது கடைசிக் காலத்தை குடும்பத்துடன் கழிக்க வசதி செய்யும் நோக்குடன் இவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கருணை அடிப்படையில் இந்த விடயம் நோக்கப்பட வேண்டுமென பிரிட்டிஷ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
லண்டன் ஹித்ரோ விமான நிலையத்திலிருந்து 1988ம் ஆண்டு அமெரிக்கா நோக்கிச் சென்ற விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியது. இதில் பயணம் செய்த 270 அமெரிக்கர்கள் பலியாகினர். இதற்கு லிபியாவைச் சேர்ந்த மொஹமட் அல் மெஹராஹி காரணம் எனக்குற்றம் சாட்டப்பட்டது.
ஏழு வருடங்கள் இடம் பெற்ற வழக்கு விசாரணைகளின் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். இவரின் மருத்துவ பரிசோதனையில் மரணத்தை நெருங்கியுள்ள நோயாளி என ஊர்ஜிதம் செய்யப்பட்ட பின்னர் ஸ்கொட்லாந்த் சிறையிலிருந்து விடுதலையானார்.
தனது தாய்நாடான லிபியா சென்ற இவருக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. நான் மரணிப்பதற்காகவே வீடு செல்கிறேன் என சிறையிலிருந்து வெளியேறுகையில் மொஹமட் அல் மெஹ்ராஹி கூறியமை குறிப்பிடத்தக்கது.