யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றுக்கு இந்திய வீராங்கனை சானியா மிர்சா மற்றும் இந்திய வீரர் சோம்தேவ் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.
யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடக்கிறது. நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, பெலாரசின் வோல்கா கோவர்ட்சோவாவை எதிர்கொண்டார்.
இதில் சானியா 6-2, 3-6, 6-3 என்ற செட்களில் வென்று, இரண்டாவது சுற்றுக்கு தகுதிபெற்றார். அதில் அவர் இத்தாலியின் பிளாவியா பென்னட்டாவுடன் மோதுகிறார். ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன், போர்ச்சுக்கல்லை சேர்ந்த பெரட்ரிகோ கில்லை 6-3, 6-4, 6-3 என வென்றார். இவர் இரண்டாவது சுற்றில் ஜெர்மனியின் பிலிப் கோல்ஸ்கிரைப்பரை சந்திக்கிறார்.
இது குறித்து சானியா கூறுகையில், கிராண்ட்ஸ்லாம் தொடரின் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு ஒற்றையர் போட்டியில் ஒரே சமயத்தில் இரண்டு இந்தியர்கள் இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.