கண்டி, கலகெதர பிரதேசத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், 44 பேர் படுகாயமடைந்துள்ளனர். கதிர்காம யாத்திரை சென்று திரும்பி வந்து கொண்டிருந்த பஸ் வண்டி கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்ததிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்துக்குள்ளான வாகனத்தை செலுத்தி வந்த பஸ் சாரதியும், பாடசாலை மாணவி ஒருவமே இந்த விபத்தில் பலியானவர்கள் என்று தெரிவித்த பொலிஸார் காயமடைந்தவர்கள் கண்டி மற்றும் கலகெதர வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கண்டி- குருநாகல் பிரதான வீதியில் நேற்று முன்தினம் (31) நள்ளிரவு இந்த சம்பவம் இடம் பெற்றிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவாவது:- நீர் கொழும்பு- தங்கொடவிலிருந்து கதிர்காமத்திற்கு சுற்றுலாப் பயணமொன்றை மேற்கொண்ட இவர்கள் மீண்டும் தமது வீட்டுக்குச் செல்லும் போதே இந்த விபத்து நடந்துள்ளது.
எட்டாம் தரத்தில் கல்வி பயிலும் ஜயவீர ஆராச்சிலாகே ருமேஸ் மதுஷா (வயது-8) என்பவரும் குறித்த பஸ் வண்டியின் சாரதியான எம். கிர்ஷான் (40) ஆகிய இருவருமே ஸ்தலத்திலேயே பலியானார்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் 17 பேர் பலத்த காயங்களுடன் கண்டி வைத்தியசாலையிலும் 13 பேர் கலகெதர வைத்திய சாலையிலும் சிகிச்சைபெற்று வருகின்றனர். பலர் சிகிச் சைகளைப் பெற்ற பின்னர் வைத்தியசாலையிலிருந்து வெளி யேறிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.