மலையகத் தின் அனைத்துத் தோட்டங்களிலும் தொழிலாளர்கள் இன்று இரண்டாம் திகதி முதல் ஒத்துழையாமை போராட்டத்தை ஆரம்பிக்கின்றனர். தொழிலாளர்களின் நாட் சம்பளத்தை 500 ரூபாவால் அதிகரிப்பதற்கு முதலாளிமார் சம்மேளனம் மறுத்துவிட்டதையடுத்து, தொழிலாளர்கள் இந்தப் போராட்டத்தை ஆரம்பிப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் பிரதி அமைச்சர் முத்துசிவலிங்கம் தெரிவித்தார்.
கொட்டகலையில் நேற்று சங்கங்கள் ஒன்றுகூடி இந்தத் தொழிற்சங்கப் போராட்டம் நடத்துவது பற்றித் தீர்மானித்ததாகப் பிரதி அமைச்சர் முத்துசிவலிங்கம் தெரிவித்தார்.
இதேவேளை, தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பது தொடர்பாக மீண்டும் எதிர்வரும் 7 ஆந் திகதி பேச்சுவார்த்தை நடத்த வருமாறு முதலாளிமார் சம்மேளனம், தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன. எவ்வாறெனினும், 500 ரூபா சம்பள உயர்வு என்ற அடிப்படையிலும், ஏப்ரல் மாதத்திலிருந்து அதிகரிக்கப்படும் தொகையை தீபாவளி மாதச் சம்பளத்துடன் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாரென தொழிற்சங்கங்கள் அறிவித்து விட்டதாக பிரதி அமைச்சர் சிவலிங்கம் தெரிவித்தார்.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பதற்கான பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் (31) கொட்டகலையில் நடை பெற்றது. இதில் நாளொன்றுக்கு 500 ரூபா வழங்க வேண்டும் எனச் சங்கங்கள் கோரின. ஆனால் முதலாளிமார் சம்மேளனம், அவ்வாறு வழங்க முடியாதென்றும் 12.5% அதிகரிக்க முடியுமென்றும் கூறிவிட்டது. இதனால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
கடந்த மார்ச் 31 ஆம் திகதியுடன் கலாவாதியான கூட்டு ஒப்பந்தத்தைப் புதுபிக்க இதற்கு முன்பு நடைபெற்ற பேச்சுவார்த்தையும் இணக்கமின்றி முறிந்தது. மீண்டும் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையிலும் முதலாளிமார் சம்மேளனம் சம்பள அதிகரிப்பை நிராகரித்து விட்டது. இதனையடுத்து தொழிற்சங்கங்கள் அடுத்த கட்டமாக மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து நேற்று கொட்டகலையில் கூடி ஆராய்ந்து முடிவெடுத்துள்ளன. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், தோட்டத் தொழிற்சங்கக் கூட்டுக் கமிட்டி ஆகிய சங்கங்கள் இணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கின்றன.
இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், தோட்டத் தொழிலாளர்கள் மனநிறைவுடன் பணியாற்றுவதற்கு அவர்களுக்கு திருப்திகரமான சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டுமென தோட்டத் தொழிற் சங்கக் கூட்டுக் கமிட்டியின் தலைவர் எஸ். இராமநாதன் தெரிவித்தார். தமது அமைப்பில் உள்ள தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி இம்முறை போராட்டத்தை இறுக்கமாக மேற்கொள்ளப் போவதாக இராமநாதன் கூறினார்.
தொழிலாளர்களுக்கு தற்போது 200 ரூபா அடிப்படைச் சம்பளமாகவும், தேயிலை விலைக்கு 20 ரூபாவும், 75% வேலைக்குச் சென்றால் 70 ரூபாவும் வழங்கப்படுகின்றது. இதனையடுத்து மொத்தமாக 500 வழங்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இதேவேளை, தொழிலாளர்களின் வேதன உயர்வு தொடர்பான நடவடிக்கைகளுக்கு மலையக மக்கள் முன்னணி இதய சுத்தியுடன் இணைந்து செயல்படுவதற்கும் போராட்டங்களில் பங்கெடுப்பதற்கும் பின் நிற்காது.
கட்டாயமாக இன்றைய வாழ்க்கையை ஓரளவாவது சமாளிப்பதற்கு 600 ரூபா நாட்சம்பளமாக வழங்க வேண்டும் என்பதில் நாம் உறுதியாகவே இருக்கின்றோம் என்று மலையக மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினரும் வாழ்க்கைத் தொழில் தொழில்நுட்ப பயிற்சி பிரதி அமைச்சருமான பெ. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
“மலையக மக்கள் முன்னணி சமூக நலனில் அக்கறையுடனேயே செயற்பட்டு வருகின்றது. முதலாளிமார் சம்மேளனம் மலையகத் தொழிலாளர்களின் விடயத்தில் எப்போதும் மாற்றான் தாய் மனப்பான்மையுடனேயே நடந்து கொள்வது வேதனைக் குரிய விடயமாகும்.
கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்கள் கடந்த காலத்தில் நடந்து கொண்ட முறையிலிருந்து விடுபட்டு சமூக நலனில் அக்கறை காட்டும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஐக்கிய தேசியக் கட்சி இவ்விடயத்தில் ஒதுங்கி இருக்கக் கூடாது. அதே போல மற்றைய கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்களும் நடைமுறைப் பற்றாக்குறைகள், வாழ்க்கைச் செலவு உயர்ச்சி, வேலை குறைப்பு என்பவைகள் தொடர்பாக உறுதியான முடிவு எடுக்க வேண்டும்” எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.