அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் நடப்பு சாம்பியன்களான ரொஜர் பெடரர் மற்றும் செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் இலகு வெற்றியீட்டினர். இந்த ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டி நேற்று முன்தினம் நியூயோர்க்கில் ஆரம்பமானது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனான சுவிட்சர்லாந்தின் ரொஜர் பெடரர், அமெரிக்காவின் டெவின் பிரிட்டொனை எதிர்கொண்டார். போட்டியின் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய முதல் நிலை வீரர் பெடரர் 6-1, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றியீட்டினார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த மற்றுமொரு போட்டியில் அமெரிக்காவின் 5 ஆம் நிலை வீரர் அன்டி ரொடிக் ஜெர்மனியைச் சேர்ந்த பிஜோர்ன் பவோவை 6-1, 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார்.
இதேபோன்று பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனான அமெரிக்காவின் இரண்டாம் நிலை வீராங்கனை செரீனவில்லியம்ஸ் தனது முதல் சுற்றுப் போட்டியில் சக நாட்டு வீராங்கனை ஒல்கா கொவொட்சோவாவை 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி இரண்டாவது சற்றுக்கு முன்னேறினார். இதில் மற்றுமொரு முன்னணி வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ் முதல் சுற்று போட்டியில் போராடி வெற்றியீட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்ஸா போராடி வெற்றியீட்டினார். பெலாரஸ் வீராங்கனை ஒல்கா கொவோர்ட்சோவாவை நேற்று முன்தினம் நடந்த முதல் சுற்றுப் போட்டியில் சந்தித்த சானியா 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் போராடி வெற்றிபெற்றார். அடுத்து அவர் தனது இரண்டாவது சுற்றில் உலக தரவரிசையில் 10 ஆவது இடத்தில் இருக்கும் பிளவியா பெனட்டாவை சந்திக்கிறார்.
பெனட்டா தனது முதல் சுற்றுப் போட்டியில் ருமேனியாவின் எடினா கொலோவிட்ஸை 6-0, 6-4 என்ற நேர் செட் கணக்கில் இலகுவாக வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.