அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையில், அதிபர் பாரக் ஒபாமா இப்தார் விருந்து அளித்தார். அப்போது அவர் பேசுகையில், இஸ்லாமையும், அமெரிக்க முஸ்லீம்களையும் அவர் வெகுவாக புகழ்ந்தார்.
செவ்வாய்க்கிழமை இரவு இந்த இப்தார் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. ஒபாமா அதிபராகப் பதவியேற்ற பின்னர் நடத்தும் முதல் விருந்து நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிபர் ஒபாமா பேசுகையில், அமெரிக்காவுக்கும், முஸ்லீம் உலகுக்கும் இடையிலான நல்லுறவை வலுப்படுத்தும் பாலமாக நான் தொடர்ந்து செயல்படுவேன்.
நாம் (அமெரிக்கா, முஸ்லீம்கள்) இணைந்து, பரஸ்பர நம்பிக்கை, பரஸ்பர நல்லெண்ணம் ஆகியவற்றை வலுப்படுத்த வேண்டிய பொறுப்பில் இருக்கிறோம். அதிபர் பொறுப்பில் எனது முக்கியக் கடமைகளில் ஒன்றாக இதை நான் கருதுகிறேன். அமெரிக்காவுக்கும், உலகெங்கும் வாழும் முஸ்லீம்களுக்கும் இடையிலான உறவில் புதிய தொடக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த புனிதமான மாதத்தில் உறவை வலுப்படுத்தவும், புதுப்பிக்கவும் நாம் உறுதி கொள்வோம்
மாபெரும் மதத்தை நான் இன்று இரவு கொண்டாடுகிறோம். அமெரிக்க முஸ்லீம்கள் இந்த நாட்டுக்கு ஆற்றிய சேவையை, கடமையை நாம் நினைவு கூர்ந்து பாராட்டுவோம். தங்களது வாழ்க்கையின் மூலம் எண்ணற்ற அமெரிக்க முஸ்லீம்கள் நிரூபித்துக் காட்டியுள்ள பல்வேறு நல்லுதாரணங்களை நாம் நினைவு கூருவோம். இதை அடிப்டையாக வைத்து மேலும் சிறந்த, நம்பிக்கை வாய்ந்த உலகை கட்டியெழுப்ப உறுதி பூணுவோம் என்றார் ஒபாமா.