கல் முனையிலிருந்து கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்த பஸ் வண்டியும் கொழும்பிலிருந்து பிபிலை நோக்கி சென்று கொண்டிருந்த பஸ் வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் ஸ்தலத்தில் கொல்லப்பட்டுள்ளார்.
கண்டி, முல்கம்பளை பிரதேசத்தில் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்துச்சம்பவத்தில் சுமார் 17 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் கல்முனை கொழும்பு தனியார் பஸ் வண்டியின் உரிமையாளரான கல்முனைக்குடியைச் சேர்ந்த உவைஸ் (34) என்பவரே ஸ்தலத்தில் கொல்லப்பட் டுள்ளார். இவரே இந்த பஸ் வண்டியை விபத்து இடம்பெற்ற சமயம் செலுத்தி வந்துள்ளார். இந்த விபத்து தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது:-
27 பயணிகளை ஏற்றிக் கொண்டு கல்முனையிலிருந்து கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்த பஸ்வண்டி கண்டி பழைய வீதியில் ஒருவரை இறக்கி விட்டு கொழும்பு நோக்கி வந்துள்ளது. இதன் போது கொழும்பிலிருந்து பிபிலை நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் வண்டி வேகமாக வந்துள்ளது.
இ.போ.ச. பஸ் வண்டியின் சாரதி வேகத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் பஸ்ஸை குறுக்கு வழியில் செலுத்த முற்பட்ட போது அந்த பஸ் வண்டி தனியார் பஸ் வண்டியுடன் வேகமாக சென்று நேருக்கு நேர் மோதுண்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் தனியார் பஸ் வண்டியின் சாரதி தலையில் கடும் காயங்களுக்குள்ளான நிலையில் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார்.
இரு பஸ் வண்டிகளின் முன்புரம் முற்றாக சேதங்களுக்குள்ளாகி உள்ளன. தனியார் பஸ் வண்டியில் பயணம் செய்த 10 பேரும், இ.போ.ச. பஸ் வண்டியில் 7 பேரும் படுகாயமடைந்த நிலையில் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் இ.போ.ச. பஸ் வண்டி சாரதியின் கால்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
இதேவேளை இந்த சம்பவம் தொடர்பாக விபத்துக்குள்ளான கல்முனை – கொழும்பு தனியார் பஸ் வண்டியின் மற் றுமொரு சாரதியான கே. எம். எம். நதீர் இந்த விபத்து தொடர்பாக விபரிக்கையில்,
“இரவு 2.30 மணி இருக்கும் எமது பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்த சகலரும் உறக்கத்தில் இருந்தனர். எமது பஸ் உரிமையாளரே வாகனத்தை செலுத்தி வந்து கொண்டிருந்தார். நான் பஸ்ஸின் 3 ஆம் இலக்க ஆசனத்தில் அமர்ந்திருந்தேன். கண்டியில் ஒருவரை இறக்கி விட்டு எமது பஸ் வண்டி சென்று கொண்டிருந்தது. அப்போது எமது பஸ்வண்டிக்கு எதிரே இ.போ.ச. பஸ் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. பாதையில் குழி ஒன்று இருந்ததை அடுத்து இ.போ.ச. சாரதி வேகத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் குறுக்கு வழியில் பஸ்ஸை செலுத்தியதும் பாரிய சத்தத்துடன் எமது பஸ் வண்டியுடன் மோதுண்டது. சற்று நேரம் ஒன்றும் விளங்கவில்லை. பின்னர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதே தெரிந்தது என்றார்.