வடக்கின் வசந்தம் அபிவிருத்திக் கருத்திட்டம் தொடர்பான மீளாய்வு நிகழ்வொன்று நேற்று வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறியின் தலைமையில் வவுனியா மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றுள்ளது. குறிப்பாக வடக்கின் வசந்தம் அபிவிருத்திக் கருத்திட்டத்தின் மூலம் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தி குறித்தும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது முக்கிய கவனம் செலுத்தப்பட்டதாக வவுனியா மாவட்டச் செயலகம் தெரிவித்தது. இது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதுடன் அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பான முன்னேற்ற அறிக்கையினை சம்பந்தப்பட்ட திணைக்களத் தலைவர்கள் சமர்ப்பித்துள்ளனர்.
இம்மீளாய்வின் போது எதிர்கால வேலைத் திட்டங்கள் சம்பந்தமாகக் கவ னம் செலுத்தப்பட்டுள்ளதுடன் வவுனியா நகரை அண்டியுள்ள கிராமங்களிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களை மீளக் குடியமர்த்துதல் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதாகவும் மாவட்டச் செயலகம் தெரிவித்தது.
இந்நிகழ்வினையடுத்து வட மாகாண ஆளுநர் சில கிராமங்களுக்கு விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்ததுடன் அவருடன் அதிகாரிகள் குழுவொன்றும் சென்றிருந் தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நேற்றைய தினம் ஆண்டிய புளியங்குளம் முஸ்லிம் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 1300 இடம் பெயர்ந்த குடும்பங்கள் மருதமடுவ நலன் புரிநிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மேற்படி பாடசாலையை இயங்க வைப்பதற்கான முன்னோடி நடவடிக்கையாகவே இக் குடும்பங்கள் இடமாற்றப்பட்டதாக மாவட்டச் செயலக உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.