யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளரை கத்தியால் குத்திய மாணவன் பல மணி நேரம் சுதந்திரமாக பல்கலைக்கழகத்தில்…. – நிர்வாகம் ஒத்துழைத்ததா? – வி. அருட்செல்வன்

Sivarajah_N_Drயாழ்ப்பாண பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளரும்,  உலக சுகாதார நிறுவனத்தின் வடக்கு இணைப்பாளருமான வைத்தியகலாநிதி என். சிவராஜா கடந்த ஆகஸ்ட் 24ஆம் திகதி சமூக மருத்துவத்துறை அலுவலகத்தில் வேறு இரண்டு மருத்துவபீட மாணவர்களுடன் பரீட்சையில் ஈடுபட்டிருந்த வேளையில்  பல்கலைக்கழக மாணவன் ஒருவரின் கத்திக்குத்துக்கு இலக்கானமை தெரிந்ததே.

இந்த சம்பவத்தின் பின்னணியில் இருந்த வைத்திய பீட மாணவன் ரிஜி ரஜிவ் என்பவர் கலாநிதியை கத்தியால் குத்திய பின்பும் பல மணி நேரங்கள் பல்கலைக்கழக வளவினுள்ளே சுதந்திரமாக இருந்துள்ளதாகவும் அடுத்தநாளே இவர் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறியதாகவும் நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது பற்றி மேலும் தெரிய வருவதாவது, ஆகஸ்ட் 24ஆம் திகதி மாலை 4.00 மணியளவில் வைத்தியகலாநிதி என். சிவராஜா யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் மருத்துவபீட மாணவர்களின் ஆய்வு தொடர்பாக மாணவர்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருந்தார். அத்தினம் 14 மாணவர்கள் வைத்தியகலாநிதியிடம் கலந்துரையாட நேரம் ஒதுக்கியிருந்தனர். சமூக மருத்துவத்துறை அலுவலகத்தில் இவ்விரு மாணவர்களாக அழைத்து  பரீட்சையில் ஈடுபட்டிருந்த வேளையில் திடீரென ஒரு மாணவன் வைத்தியகலாநிதியின் அறைக்குள் நுழைந்து தங்களுடன் கதைக்க வேண்டும் என்று கோரியுள்ளார். அச்சந்தர்ப்பத்தில் தான் விரிவுரை நடத்திக் கொண்டிருப்பதாகவும், இந்த மாணவர்கள் ஏற்கனவே நேரம் ஒதுக்கியிருப்பதாகவும் எனவே தற்போது கதைக்க முடியாது நாளைய தினம் கதைப்போம் என வைத்தியகலாநிதி கூறியுள்ளார். அச்சந்தர்ப்பத்தில் பரீட்சையில் ஈடுபட்டிருந்த இரண்டு மாணவிகளையும் வெளியே செல்லும்படி அச்சுறுத்திவிட்டு வைத்தியகலாநிதியை கத்தியால் குத்த பாய்ந்துள்ளார். பேராசிரியர் தனது இருக்கையிலிருந்து எழுந்த நேரத்தில் கத்தி அவரின் வயிற்றில் பாய்ந்துள்ளது. இருக்கையிலிருந்து எழுந்திராவிடின் கத்தி நெஞ்சில் பாய்ந்திருக்குமென கூறப்படுகின்றது. மறுபடியும் வைத்தியகலாநிதியை கத்தியால் குத்த எத்தனித்த நேரத்தில் வைத்தியகலாநிதி மாணவனின் கையைப் பிடித்து தடுத்துள்ளார். கண்ணன் என்ற ஒரு உதவியாளர் கலாநிதி சிவராஜாவின் அவலக்குரல் கேட்டு உள்ளேபாய்ந்து அந்த மாணவனை வெளியேற்றியிருக்கிறார் எனத் தெரியவருகின்றது.

ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கலாநிதி என். சிவராஜா அவர்கள் தீவிர கண்காணிப்புப் பிரிவில் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இது விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,  கலாநிதியை கத்தியால் குத்திய மாணவன் ரிஜி ரஜிவ் எனும் பெயரையுடையவன். இவர் 1998ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்துக்கு அனுமதிபெற்றவர். தற்போது 3ம் ஆண்டில் கற்றுவரும் இவர் தொடர்ச்சியாக பல வருடங்கள் பரீட்சையில் சித்தியடைய தவறியுள்ளார். அதேநேரம்,  இந்த மாணவன் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட ஒருவன் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இதற்காக வேண்டி வைத்திய சிகிச்சைகள் பெற்றுள்ளதுடன்,  தனக்கு எந்தவித வியாதியும் இல்லையென மருந்துகள் அருந்துவதை தவிர்த்துள்ளார் என்றும் கூறப்படுகின்றது. சம்பவ தினம் இந்த மாணவன் மருத்துவபீட விரிவுரையாளர்களையும் துறைத்தலைவரையும் தேடித்தேடிவந்து கடைசியில் சமூக மருத்துவத்துறை அலுவலகத்தில் இருந்து மாணவர்களுடன் பரீட்சையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கலாநிதி சிவராஜாவிடம் தனது கைவரிசையைக் காட்டியுள்ளான். மருத்துவபீடத்தினை தொடர்ந்தும் யாழ்ப்பாணத்தில் இயங்க வைப்பதற்கு டாக்டர் நந்திபோன்ற பேராசிரியர்களின் வழியையொற்றி கலாநிதி சிவராஜா பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. 

கலாநிதியை கத்தியால் குத்திய பின்பு சுமார் 1மணிநேரம் சமூக மருத்துவத்துறை அலுவலகத்தினருகே இம்மாணவன் சுதந்திரமாக நடமாடியுள்ளதாகவும் அந்நாள் இரவு அந்த மாணவன் மாணவர் விடுதியில் தங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கத்தியால் குத்திய மாணவனை பிடித்து பொலிஸில் ஒப்படைக்க ஏனைய மாணவர்களோ அங்குள்ளவர்களோ நிர்வாகத்தினரோ முனையவில்லை எனவும் அந்த மாணவன் மிகவும் சுதந்திரமான முறையிலே நடமாடியதாகவும் மேலும் தெரியவருகின்றது.

இது போன்ற சம்பவம் நிகழுமிடத்து பல்கலைக்கழக நிர்வாகம் உரிய விடயத்தை உடன் பொலிஸிக்கு அறிய கொடுக்க வேண்டிய நிலையுள்ளது. ஆனால்,  இந்த விடயம் குறித்து உடனடியாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்படவில்லை என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கலாநிதி என். சிவராஜா 72 வயது நிரம்பியவர். தனது 65ஆவது வயதில் ஓய்வுபெற்ற பின்பும் உலக சுகாதார நிறுவனத்தின் வடக்கு இணைப்பாளராக பணியாற்றிவந்தார். அதேநேரம்,  யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்களுக்கு எதுவித ஊதியங்களும் பெறாமல் சேவையடிப்படையில் வருகை விரிவுரையாளராக விரிவுரைகள் நடத்தி வந்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில் தனது விரிவுரையாளர் தாக்கப்பட்ட நேரத்தில் பல்கலைக்கழக நிர்வாகம் அசமந்தப் போக்குடன் நடந்து கொண்டமை அனைவரினதும் விமர்சனங்களுக்கு உட்பட்டுள்ளது. குறித்த மாணவன் மறுதினம் வவுனியா காவலரங்கை பாதுகாப்பாக தாண்டிய பிற்பாடே முறைப்பாடு செய்யதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மறு புறமாக இந்த மாணவன் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற இவ்வளவு விரைவாக எவ்வாறு அனுமதி பெற்றான் என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.

பொலிஸ் தரப்பில் இது தொடர்பாக உடனடியாக முறைப்பாடு செய்யப்படவில்லை என்றும் கலாநிதி கத்தியால் குத்தப்பட்ட விடயம் குறித்த முறைப்பாட்டினை கடிதம் மூலமாகவே பல்கலைக்கழக நிர்வாகத்தால் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பிட்ட சிலரினால் மறுதினம் இந்த விடயம் தொடர்பாக கொழும்பிலுள்ள பொலிஸ் தலைமையக உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ளப்பட்டு கொழும்பிலிருந்து யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட பின்பே பொலிஸார் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அதுவரை உத்தியோகபூர்வமான முறைப்பாடுகள் பொலிஸாருக்கு பல்கலைக்கழக நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது. இது விடயமாக உண்மை நிலை அறிந்து கொள்ள பல்கலைக்கழக நிர்வாகத்துடன் தொடர்பு கொண்ட போதிலும்கூட தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ள முடியவில்லை. தற்போது அந்த மாணவன் எங்குள்ளார் என்று தெரியவில்லை. அவரை தேடும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் கூட பல்கலைக்கழக விரிவுரையாளரை கத்தி குத்துக்கு இலக்காக்கிய ஒரு மாணவனுக்கு பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருக்க எவ்வாறு இடம் வழங்கப்பட்டது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இவ்விடயத்தில் நிர்வாகம் ஒத்துழைத்ததா என்ற கேள்வி ஏற்படுகின்றது. மறுபுறமாக இந்த சம்பவங்களை வைத்துப்பார்க்கும் போது மாணவர்கள் எதிர் காலத்தில் விரிவுரையாளர்களை அச்சுருத்தியே தமது சித்தியை அடைந்து கொள்ள முனைவார்கள் என்ற நிலை ஏற்பட மாட்டாது என்பதை உறுதிப்படுத்த முடியுமா? என்ற சந்தேகமும் எழுகின்றது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 Comments

  • Thevan Kanagarajah
    Thevan Kanagarajah

    யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடம் மூடப்படுவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை முன்னாள் துணைவேந்தர் பாலசந்தரம்பிள்ளை எடுத்திருந்தார். இப்பொழுது அதனை தற்போதைய துணைவேந்தர் என்.சண்முகலிங்கன் எடுத்திருக்கிறார். சமூக மருத்துவத்துறை இயங்குவது இனி அங்கு கேள்விக்குறியாகும். அத்துறை இல்லாமல் மருத்துவத்துறைக்கல்வி முழுமைபெறப் போவதில்லை. பின்னர் என்ன? மனநோயாளி ஒருவனை பாதுகாப்பாக சிறப்பு விசா எடுத்து யாழ்ப்பாணத்திலிருந்து அப்புறப்படுத்திய துணைவேந்தர் பல்கலைக்கழகத்துக்காக தன் வாழ்வின் பெரும்பங்கை தன்நலம் கருதாமல் செயற்பட்ட 72 வயது அனுபவம் மிக்க முதுநிலை விரிவுரையாளர் ஒருவரை அம்போ என்று விட்டுவிட்டார். இதற்க அவர் என்றாவது பதில் சொல்லியேயாக வேண்டும்.

    தமது இறுதிநிலைப் பரீட்சையை எழுதிவிட்டு எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிக் கொண்டுள்ள மருத்துவபீட மாணவர்களுக்கும் இது ஒரு சுயவிமர்சனத்துக்கான காலம் தான். அந்த மனநோயாளி 24 மணிநேரம் சுதந்திரமாக டீவி பார்த்துக்கொண்டு 300 பேரடங்கிய ஆண்கள் தங்கவிடுதியில் வீசீயின் அழைப்பு வரும்வரை உல்லாசமாக இருந்திருக்கிறான். அங்கிருந்த ஒரு மாணவனுக்காவது அவனைப்பற்றி பொலிசில் புகார் சொல்லி அவனைப் பிடித்துக்கொடுக்க தெம்பில்லையா? புலிகளின் ஆட்சியில் ஒரவன் சுட்டுவிட்டுப் போவான். அதைப்பற்றி கேள்வி எழுப்ப ஒருவரும் முன்வரமாட்டார்கள். செத்தவன் பற்றி இயக்கம் சொல்லிவிட்டுப்போகும் காரணத்தை எதிர்க்குரல் எழுப்பாமல் நம்பித்திரிந்த 30 வருட அடிமை வாழ்க்கையின் மற்றுமொரு பரிமாணம் இதுவாகும்.

    இந்த நிகழ்வின் பலன் உண்மையாகச் சுடத்தொடங்கும் போது இந்த மருத்துவபீட மாணவர்கள் கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம் பண்ணுபவர்களாகத் தான் இருப்பார்கள். அல்லது மருத்துவபீடம் மூடப்படுவதற்கு அரசாங்கத்தின் திட்டமிட்ட சதி என்று குரல் எழுப்பி கடையடைப்புச் செய்வார்கள். இதைத்தவிர வேறு எதைத்தான் இவர்களால் செய்யமுடியும்? ச்சீ..

    Reply
  • சட்டம் பிள்ளை
    சட்டம் பிள்ளை

    //கலாநிதியை கத்தியால் குத்திய பின்பு சுமார் 1மணிநேரம் சமூக மருத்துவத்துறை அலுவலகத்தினருகே இம்மாணவன் சுதந்திரமாக நடமாடியுள்ளதாகவும் அந்நாள் இரவு அந்த மாணவன் மாணவர் விடுதியில் தங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கத்தியால் குத்திய மாணவனை பிடித்து பொலிஸில் ஒப்படைக்க ஏனைய மாணவர்களோ அங்குள்ளவர்களோ நிர்வாகத்தினரோ முனையவில்லை எனவும் அந்த மாணவன் மிகவும் சுதந்திரமான முறையிலே நடமாடியதாகவும் மேலும் தெரியவருகின்றது.//

    நிர்வாகம் தான் கத்தியால் குத்திய மாணவனை காப்பற்றி அனுப்பியதாகவும் ஒரு கதை உலா வருகிறது

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    யாழ் பல்கலைக்கழகத்தில் கத்திக் குத்திலீடுபட்ட மாணவன் போன்று பல மனநோயாளிகள் இருக்கின்றனர் போலுள்ளது. இந்த நிலையை புலிகள் தான் ஏற்படுத்தி வைத்தனர் என்பதில், எந்த வித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. 30 வருட மூளைச்சலவை மனநோயை 30 நாட்களிலோ அல்லது 3 மாதத்திலோ மாற்றி விட முடியாது. படிப்படியாகத்தான் மாற்ற முடியும். ஆனால் அவசர சிகிச்சையாக சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.

    Reply
  • palli
    palli

    இந்த மாணவனையும் அவனது குடும்பத்தையும் எந்தவித நிபந்தனையும் இன்றி பதினெட்டு பல்கலை கழகத்தில் இருந்தும் பல்லி விலக்கி வைக்கிறேன்; இவரை பணம் வாங்கியோ அல்லது அரசியல் ஆதாயம் கொண்டோ யாராவது உதவ முன்வந்தால் அவர்கள் பல்லியால் தேசத்தில் வறுதெடுக்க படுவார்கள்; இதுதான் இந்த மாணவனுக்கு அல்ல மரமண்டைக்கு பல்லியின் தீர்ப்பு;

    Reply
  • mano
    mano

    யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற உடனடி அனுமதி பெறுவதற்கு> யாராவது உதவ வேண்டும் என்பது இல்லை. அம் மாணவன் ஒரு நோயாளி என்ற காரணமே போதுமானது. வைத்தியச் சிகிச்சைக்கு பாதுகாப்புத்தரப்பு அனுமதி கிடைக்கும். அல்லது ஏற்கனவே அனுமதியை எடுத்து வைத்திருந்தவராகவும் இருக்கலாம்.

    Reply
  • nantha
    nantha

    புலிகளின் ஆட்சியிலும் அதன் பின்னர் புலிகள் ஆட்சி இல்லாமல் அரசின் அடக்கு முறை ஆட்சியும் இப்படியாகவே பிரச்சினைகளை யாழ்ப்பாணத்தில் கையாண்டது கண்துடைப்புக்கு நீதிமன்றம் பொலீஸ் என வைத்திருந்தபோதும் துவக்கு கோடாலி சண்டித்தனமே ஆட்சி செய்ததை யாரும் அறிவர்

    இதன் அடிப்படையிலேயே யாழ்பல்கலைக்கழக மாணவனும் தனது சித்தியை பெற முயற்ச்சித்தான் அல்லது அதேபோல இந்த மாணவனைப் பாவித்து பல்கலைக்கழக சண்டியர்கள் அதிகாரத்தில் மாற்றங்களை செய்ய அல்லது தாம் அந்தப்பதவியை பிடிக்க முயற்ச்சித்திருக்கலாம்

    நாம் நன்றாக அறிந்த ஒன்று யாழ்பல்கலைக்கழகத்தில் விரிவரையாளர்கள் தமக்கு பிடித்த தனது ஊரவனுக்கு தனது சாதிக்கு என்றெல்லாம் புள்ளிகள் வழங்கி பட்டம்பெற வைப்பதும் புள்ளிகள் வழங்கியிருந்ததும் தெரிந்ததே. இவற்றில் பல புலிகள் ஆட்சிக்கு முன்பும் பின்னர் புலிகளின் ஆட்சி ஆரம்பகாலத்தில் இல்லாமலும் புலிகளின் பின்னய ஆட்சி காலத்தில் இப்படியாக வழமை நடைமுறையிலும் இருந்தது இப்போ இந்த முறை தலையற்ற வழிமுறைகள் மீண்டும் ஆரம்பிப்பதாகவே எதிர்பார்க்கிறேன்.

    Reply
  • Ranjan
    Ranjan

    பல்லி இந்த பொடியனை யாரோ பாவித்துப்போட்டார்கள் போல இருக்கு இதில யாழ்ப்பாணத்தார் மிக கெட்டிக்காரர். பொடியும் விசயம் தெரியாமல் அம்புட்டுப்போட்டுது…..

    Reply
  • palli
    palli

    அபடியானால் அந்த உசுப்பேத்திய பகுத்தறிவாளன் யார்; மாணவன் சொல்லட்டுமே?

    Reply
  • Thevan Kanagarajah
    Thevan Kanagarajah

    கலாநிதி ந.சிவராஜா சமூக மருத்துவத்துறைத் தலைவர் பதவியை அதிகாரபூர்வமாக பல்கலைக்கழகத்தின் சம்பளப்பட்டியலில் இருந்து மேற்கொள்ளவில்லை. 65வயதில் அவர் இளைப்பாறியபின்னர் அந்தப் பதவி வெற்றிடமாகவே இருக்கின்றது. அதில் ஒருவரும் நியமனம்பெறத் தகுந்தவர்கள் இல்லாத நிலையிலேயே தனது அனுபவத்தை இலவசமாக மருத்துவபீட மாணவர்களுக்கு வழங்கிவந்திருக்கிறார். தற்போது அவர் தனது கடமையிலிருந்து நீங்கிக்கொள்வதாகவேறு எழுத்துமூலம் அறிவித்துவிட்டதாக பல்கலைக்கழக மருத்துவபீட வளாகத்திலிருந்து அறிய முடிகின்றது. இனி சமூக மருத்துவத்துறைக்கு என்ன கெதி என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். முன்னர் பேராசிரியர் நந்தி மரணிக்கும் இறுதிநாட்கள் வரைகூட ஓய்வின் பின்னர் தொண்டடிப்படையில் தானே ஓட்டோவுக்கு காசு செலவுசெய்து வந்து எமக்கு விரிவுரைகள் நடத்திச் சென்றிருக்கிறார். இப்படியாக தொண்டரடிப்படையில் இயங்கும் நிலையில் பதவிக்காக எவராவது இப்பாதகச் செயலுக்குத் துண்டியிருக்கலாம் என்று என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

    Reply
  • மாயா
    மாயா

    பல்கலைக் கழக்திலேயே இப்படியான புத்திசாலிகள் என்றால், வெளியே நிலமையை நினைக்கவே பயமாயிருக்கு?

    “படித்த மனிசன் சொன்னா , கேள்” என்பார்கள். இப்ப நிலைமை இப்படியாச்சு? அதைவிட ஏனையய படித்தவர்கள் பார்த்துக் கொண்டு பேசாமல் இருந்திருக்கிறார்கள்? நாடு என்னமா மாறிப் போச்சு?

    Reply
  • சட்டம் பிள்ளை
    சட்டம் பிள்ளை

    //“படித்த மனிசன் சொன்னா , கேள்” என்பார்கள். இப்ப நிலைமை இப்படியாச்சு? அதைவிட ஏனைய படித்தவர்கள் பார்த்துக் கொண்டு பேசாமல் இருந்திருக்கிறார்கள்? நாடு என்னமா மாறிப் போச்சு?//

    மாயா,
    இனியே நம்ம தலையெழுத்து இவ்வளவு தான்

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    மாயா, சட்டம்பிள்ளை,
    முன்பு படித்த மனிதர்கள் சமுதாய மேம்பாட்டிற்காக தமது படிப்பைப் பாவித்தார்கள். இப்போ படித்தவர்கள் அந்தப் படிப்பை வைச்சு எப்படி அடுத்தவனை ஏமாற்றிப் பிழைக்கலாமெனச் சிந்திக்கின்றார்கள். இந்த நிலையில் இவர்கள் எமது சமுதாயத்தை எப்படி எல்லாம் சீரழிக்கப் போகின்றார்கள் என்பதை நினைக்கவே பயமாக இருக்கின்றது. இதில் தலையெழுத்தை நொந்து என்ன பயன்??

    Reply