இந்திய அணி இலங்கைக்கு சென்று கிரிக்கெட் தொடரில் பங்கேற்க கூடாது என கோரி தொடுக்கப்பட்ட வழக்கை மதுரை உயர்நீதிமன்ற கிளை 6 வாரத்துக்கு ஒத்திவைத்துள்ளது. இதையடுத்து வழக்கை வேறு நீதிபதிகளை கொண்ட பெஞ்ச்க்கு மாற்ற வேண்டும் என மனுதாரர் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்தியா, இலங்கை, நியூசிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இலங்கையில் வரும் 8ம் தேதி துவங்குகிறது. இலங்கையில் தமிழர்கள் ரத்தம் சிந்தி வரும் நிலையில் இந்திய அணி அங்கு சென்று கிரிக்கெட் விளையாட கூடாது என கோரி மதுரையில் வக்கீல் ஜோயல் பவுல் அந்தோணி என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுத்தார்.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், கிரிக்கெட் வாரியத்துக்கு பேக்ஸ் மூலம் நோட்டீஸ் அனுப்பியதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த வழக்கை 6 வாரத்துக்கு ஒத்திவைக்கிறேன் என்று அறிவித்தனர்.மனுதாரரின் வக்கீல்கள், சிவில் சட்டமுறை சட்டத்தில் பேக்ஸ் மூலம் அனுப்பும் நோட்டீஸை முறையான நோட்டீஸாக எடுத்து கொள்ளும் வழி வகை இருப்பதாக கூறினார். ஆனால், நீதிபதிகள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
இதையடுத்து மனுதாரர் ஜோயல் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பேக்ஸ் மூலம் ஒரு மனு அனுப்பினார். அதில், இந்திய அணி, இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்யக்கூடாது என தொடுக்கப்பட்ட வழக்கை தற்போது நீதிபதிகள் 6 வாரத்துக்கு ஒத்தி வைத்துள்ளனர். ஆனால், அதற்குள் இந்த தொடர் முடிந்துவிடும்.
தொடர் வரும் 8ம் தேதி துவங்குகிறது என்பது தெளிவாக தெரிந்த நிலையிலும் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தொடர் முடிந்த பின்னர் அந்த தொடரில் பங்கேற்க அணியை அனுப்புவதா வேண்டாமா என்பது குறித்து பேசுவதற்கு கூட இடமில்லை. இதனால் எங்கள் கோரிக்கை நிறைவேறாமல் போய்விடும்.
தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்பதை கருத்தில் கொண்டு இந்த வழக்கு வேறு நீதிபதிகளை கொண்ட பெஞ்ச் மூலம் 7ம் தேதிக்கு முன்பு விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.