இந்தியாவில் 39 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தமிழக ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் தமிழரசி கூறியுள்ளார். எச்.ஐ.வி -யால் பாதிக்கப்பட்டோரின் நல வாழ்விழா மதுரை பல்நோக்கு சமூக சேவா சங்கத்தில், தொண்டு நிறுவனங்களின் சார்பில் நடைபெற்றது.
இந்த விழாவை தமிழக ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் தமிழரசி துவக்கி வைத்து பேசுகையில், ஒரு காலத்தில் எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டோர் சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்டனர். ஆனால், தற்போது நிலைமை மாறி, அவர்களின் மரணத்தை தள்ளிப் போடும் அளவிற்கு மருத்துவம் நவீன மயமாக வளர்ந்துள்ளது.
உலகில் எட்டு கோடி பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும் புதிதாக 16 ஆயிரம் பேர் பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில் சுமார் 39 லட்சம் பேரும், தமிழகத்தில் எட்டு லட்சம் முதல் 10 லட்சம் பேருக்கு இந்த நோய் தாக்கியுள்ளது. இதில், 18 முதல் 49 வயதுடையோர் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.