ஜனாதி பதித் தேர்தலில் ஐ.தே.க.வின் வேட்பாளர் யாரென்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை. ஆனால், ஜனாதிபதித் தேர்தலில் நான் போட்டியிட்டால் நிச்சயம் வெற்றிபெறுவேன் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தல் குறித்து கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவதா, இல்லையா என்பதில் தீர்மானம் எடுக்கப்படவில்லை. அதேவேளை பிரதித் தலைவர் கருஜயசூரியா போட்டியிடப் போவதில்லையென தெரிவித்துள்ளார். இவ்வாறானதொரு சூழ்நிலையில் ஐ.தே.கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட நான் தயாராகவுள்ளேன். நான் போட்டியிட்டு வெற்றி பெற்றுக் காட்டுவேன் இது நிச்சயம் இடம்பெறும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பிரபல்யமிக்க பொதுச் செயலாளராக நான் கடமையாற்றியவன். அன்று தற்போதைய செயலாளரும், அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன பொதுச் செயலாளர் பதவிக்கு என்னுடன் போட்டியிட்டு படுதோல்வியடைந்தார். எனவே இன்னமும் எனக்கு சுதந்திரக் கட்சிக்குள் செல்வாக்கு இருக்கின்றது. விசேடமாக தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவும் உண்டு. அவர்களது பிரச்சினைகளின் போது அம்மக்களது உரிமைகளுக்காக குரல் கொடுத்து வருகின்றேன்.
இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்க்க வேண்டுமென்றால் தமிழ் மக்களுக்கு முழுமையான அதிகாரப் பரவலாக்கலை வழங்க வேண்டுமென்று அன்று தொடக்கம் இன்றுவரை வலியுறுத்தி வருகின்றேன். அது மட்டுமல்ல காணி பொலிஸ் உரிமைகளோடு அதிகாரத்தை பகிர வேண்டுமென்பதே எனது வலியுறுத்தலாகும். எனவே, தமிழ் மக்களது வாக்குகள் எனக்கு கிடைக்கும். அத்தோடு மிதக்கும் வாக்குகளையும் பெற முடியும். எனவே நிச்சயம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி பெறுவேன்.