இலங் கையின் ஆடை உற்பத்தித் துறைக்கு எவ்வித பாதிப்புக்களும் இல்லை என தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாபா தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். அமைச்சர் அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
சுனாமியின் பின்னர் ஆடை உற்பத்தித் தொழிற்சாலைகளுக்கான ஜீ.எஸ்.பி. வரிச் சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் அடிக்கடி நீடித்துக்கொண்டே வந்தது. அவ்வாறே அந்தச் சலுகை தொடர்ந்தும் கிடைத்துக்கொண்டு வருகிறது. இலங்கையின் நிலைப்பாடு குறித்து சர்வதேச சமூகத்துக்கு நன்கு தெளிவுபடுத்தியுள்ளோம். இலங்கை தொடர்பாக எழுப்பப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து இரண்டு இடங்களுக்கே விளக்கம் அளிக்க முடியும். அதில் ஒன்று ஐக்கிய நாடுகள் சபை. மற்றது சர்வதேச மனித உரிமைகள் சபை.
சர்வதேச மனித உரிமைகள் சபையில் எமது அமைச்சர் இலங்கையின் நிலைப்பாடு குறித்து பூரண விளக்கமொன்றை அளித்து பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றியும் பெற்றார். ஐக்கிய நாடுகள் சபையில் எமது பிரதிநிதி சிறந்த முறையில் விளக்கமளித்தார். அங்கும் எவ்வித எதிர்ப்புக்களும் தெரிவிக்கப்படவில்லை. இனியும் நாம் வேறு யாருடன் இதுபற்றி பேச வேண்டும்?
நாட்டின் ஆடைக் கைத்தொழில் துறைக்கு இதுவரை எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. தொடர்ந்தும் முதலீடுகள் கிடைத்து வருவதுடன் புதிய தொழிற்சாலைகளும் ஆரம்பிக்கப்பட்டு வருகின்றன. கடந்த சனிக்கிழமை திருகோணமலையிலும் ஆடை தயாரிக்கும் தொழிற்சாலையொன்று திறந்து வைக்கப்பட்டது என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.