ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்காலத்தின்போது விசேட சுற்று நிருபம் மூலம் அரச நியமனங்கள் அனைத்தையும் மறு அறிவித்தல் வரும்வரை உடன் நிறுத்திய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, அரச ஊழியர்களின் சம்பளத்தைக் கூட்டுமாறு இன்று கூக்குரலிடுவது வேடிக்கையானது என தகவல் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாபா கேள்வி எழுப்பினார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். அரச ஊழியர்களின் சம்பளத்தைக் கூட்டாவிட்டால் கடும் நடவடிக்கை எடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தேசிய ஊழியர் சங்கக் கூட்டத்தில் உரையாற்றியபோது கூறியதைச் சுட்டிகாட்டியே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்.
ஐ.தே.க. ஆட்சிக் காலத்தின்போது 7 இலட்சமாக இருந்த அரச ஊழியர்களின் எண்ணிக்கையை வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் 3 இலட்சத்தால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. புதிய நியமனங்களுக்கான ஓய்வூதியங்கள் நிறுத்தப்பட்டன. தொழில் கேட்டுப் போராடிய பட்டதாரிகள் தாக்கப்பட்டனர். கூட்டுத்தாபனங்களில் இருந்தும் பலர் நீக்கப்பட்டார்கள்.
எனினும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான அரசாங்கம் தொழிலாளர்களின் நலனுக்காக பல ஆக்கபூர்வமான திட்டங்களை அமுல்படுத்தியுள்ளது. தற்போது அரச ஊழியர்களின் எண்ணிக்கை 11 முதல் 11.5 இலட்சமாக அதிகரித்துள்ளது. 45 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவாக ஆயிரம் ரூபா வழங்கப்பட்டு வருகிறது. இதேவேளை, இதுவரை அரச ஊழியர்களுக்கு 40 வீத சம்பள அதிகரிப்பும் வழங்கியுள்ளது.
இவ்வாறான நிலையில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவரால் எவ்வாறு கோர முடியும்? பதவியில் இருக்கும்போது இவைகள் எவற்றையும் பற்றி கவனம் செலுத்தாதவர்கள் பதவிக்கு வருவதற்காக போலியாக குரல் கொடுப்பதை நாம் எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்? என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.