யாழ். மாவட்டத்தில் கணிசமான அளவில் முஸ்லிம் மக்கள் குடியேறியதும் யாழ். மாநகர சபை பிரதி மேயராக முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்படவுள்ளார். அது தொடர்பான இணக்கப்பாட்டில் ஒப்பந்தக் கைச்சாத்தொன்று நேற்று இடம்பெற்றது.
இந்நிகழ்வு கல்வியமைச்சில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும் கல்வி அமைச்சருமான சுசில் பிரேம்ஜயந்த் முன்னிலையில் இடம்பெற்றது. மேற்படி ஒப்பந்தத்தில் ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை. எல். எஸ். ஹமீத் ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளனர்.
நேற்றுக் காலை சமூக சேவைகள் அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இது பற்றி குறிப்பிட்ட போது, இவ்விடயம் சம்பந்தமாக அமைச்சர்கள் அமீர் அலி, ரிசாட் பதியுதீன் ஆகியோர் பி. பி. சி. மூலம் கருத்து வெளியிடும் வரை இது பற்றி தமக்குத் தெரியாதெனவும் அதன் பின்னர் இதற்கான சிபாரிசை வழங்கியதாகவும் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் தற்போது 65 முஸ்லிம் குடும்பங்களே உள்ளன. மேலும் இரண்டு வருடத்தில் கணிசமானளவு முஸ்லிம்கள் அங்கு குடியேறும்போது அம்மக்கள் பெயரால் சேவை செய்ய பிரதி மேயராக முஸ்லிம் ஒருவரை நியமிக்கலாம் என்றார்.
கடந்த யாழ். மாநகர சபைத் தேர்தலில் ஒன்பது வேட்பாளர்களை ஈ.பி.டி.பி. கட்சியும் நான்கு வேட்பாளர்களை அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ¤ம் பெற்றன. இதன்படி ஈ.பி.டி.பி. கட்சியினர் முதல்வர், பிரதி முதல்வர் ஆகியோர்களின் பெயர்களை அறிவித்திருந்தனர்.
இதேவேளை, பிரதி மேயர் பதவியை அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ¤க்கு வழங்க வேண்டும் என்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இந்த வேண்டுகோளை அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளருக்கு விடுத்திருந்தார்.
அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் இரு பிரிவினரையும் அழைத்து பேச்சு நடத்தியதன் பயனாக ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர். இதன்படி முதல்வர், பிரதி முதல்வர் பதவிகளை ஈ.பி.டி.பி.யினர் வகிப்பதெனவும் ஒரு வருடத்தின் பின் பிரதி மேயர் பதவியை அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸில் வெற்றி பெற்ற பிரேரிக்கப்பட்ட பிரதிநிதிக்கு வழங்குவதற்கும் இணக்கம் காணப்பட்டது.
இதனடிப்படையில் 1990 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட யாழ். முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை விரைவுபடுத்தி அவர்களுக்கு தேவையான உதவிகளை இரு தரப்பும் இணைந்து மேற்கொள்வதற்கும் இணக்கம் காணப்பட்டது. நேற்றைய ஒப்பந்த கைச்சாத்து நிகழ்வில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஈ. பி. டி. பி. கட்சியைச் சேர்ந்த யாழ். மாநகர சபைக்கு தெரிவான வேட்பாளர்கள் உட்பட முக்கியஸ்தர்களும் கிழக்கு மாகாண அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாவும் கலந்து கொண்டனர்.