பலமான நிலநடுக்கத்தால் நேற்று புதன்கிழமையன்று மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள இந்தோனீசிய கிராமங்களுக்கான நிவாரணங்கள் வந்து சேரத் தொடங்கியுள்ளன.
மேற்கு ஜாவாப் பகுதியில் இருக்கும் சில மாவட்டங்களுக்கு உணவும் குடிநீரும் சென்றடைந்துள்ள போதிலும், அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள தொலைதூர கிராமங்கள் இன்னமும் தொடர்புகள் இல்லாமல் துணடிக்கப்பட்டுள்ள நிலையிலேயே உள்ளன.
மழையும், பாதிக்கப்பட்டுள்ள சாலைகளும் அந்தப் பகுதிகளுக்கு நிவாரண உதவிகளை எடுத்துச் செல்லும் முயற்சிகளுக்கு தடைகளை ஏற்படுத்தி வருகின்றன. இந்த நிலநடுக்கம் மற்றும் நிலச்சரிவுகளால் இறந்தவர்களின் எண்ணிக்கை ஐம்பத்தியேழாக உயர்ந்துள்ளது.
நிலநடுக்கத்தின் காரணமாக புதையுண்ட மனிதர்களை தோண்டியெடுக்கும் பணிகளை வெறும் கைகளை கொண்டே போலீசாரும் இராணுவத்தினரும் மேற்கொண்டு வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வலைகள் எழுநூறு கிலோமீட்டர்களுக்கு உணரப்பட்டன.