அமெரிக்கப் பகிரங்க டென்னிஸ் போட்டியில் பெடரர், வீனஸ், செரீனா, நடால், ஜிலிஸ்டர்ஸ் ஆகிய முக்கிய வீரர்கள் 3 வது சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளனர். அதன் விபரம் வருமாறு,
உலகின் முதல் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 3 வது சுற்றுக்கு தகுதி பெற்றார். அவர் 6-3, 7-5, 7-5 என்ற நேர்செட் கணக்கில் ஜெர்மனியை சேர்ந்த சைமனை தோற்கடித்தார். மற்ற ஆட்டங்களில் மார்ட்டின் டெல போட்ரோ (அர்ஜென்டினா) லைடன் ஹெவிட் (அவுஸ்திரேலியா) டேவிட் பெரர் (ஸ்பெயின்) ஆகியோர் வென்றனர். 3 ம் நிலை வீரரான ரபெல் நடால் 2 வது சுற்றுக்கு முன்னேறினார்.
வில்லியம்ஸ் சகோதரிகளான வீனஸ், செரீனா 3 வது சுற்றுக்கு தகுதி பெற்றனர். இரண்டாம் நிலை வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 6-1, 6-1 என்ற நேர் செட்கணக்கில் மெலின்டாவை (ஹங்கேரி) தோற்கடித்தார்.
மூன்றாம் நிலை வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா) 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் சக நாட்டைச் சேர்ந்த பெதானியை வீழ்த்தினார். மற்ற ஆட்டங்களில் முன்னாள் முதனிலை வீராங்கனையான கிம் கிலிஸ்டர்ஸ் (பெல்ஜியம்), ஜூவானேரவா (ரஷ்யா) டேனிலா (சுலோவாக்கியா) ஆகியோர் வென்றனர்.
இந்தியாவின் முன்னணி வீராங்கனையான சானியா மிர்சா 2 வது சுற்றில் தோல்வி அடைந்தார். அவர் 0-6, 0-6 என்ற கணக்கில் உலகின் 10 ஆம் நிலை வீராங்கனையான பிளவியாவிடம் தோற்றார். இதேபோல 17 ஆம் நிலை வீராங்கனையான அமெய்லி மவ்ரஸ்மோவும் அதிர்ச்சி கரமாக தோற்றார்.