2011 ஆம் ஆண்டுக்கான உலக கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழா பங்களாதேசில் பெப்ரவரி 17 ஆம் திகதி நடைபெறும் என்று ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
2011 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான மத்திய அமைப்பு குழுக் கூட்டம் மும்பையில் நடந்தது.
ஐ.சி.சி. துணை தலைவர் சரத்பவார் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) தலைமை செயல் அதிகாரி ஹாரூன் லார்கட், போட்டியை நடத்தும் இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் ஆகிய கிரிக்கெட் சபைகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழாவை பங்களாதேசில் பெப்ரவரி 17 ஆம் திகதி நடத்துவது என்றும் தொடக்க ஆட்டத்தை அங்கு பெப்ரவரி 19 ஆம் திகதி நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. முதலில் பெப்ரவரி 19 ஆம் திகதி தொடக்க விழா மற்றும் தொடக்க ஆட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
போட்டி அட்டவணை முழு விவரம் நவம்பர் 9 ஆம் திகதி வெளியிடுவது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. போட்டி நடைபெறும் இடங்கள் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஆய்வு செய்வது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கூட்டம் முடிந்ததும் போட்டி அமைப்பு குழு இயக்குனர் ரத்னாகர் ஷெட்டி கூறுகையில், ‘பயன் அளிக்கக் கூடிய கூட்டம் இதுவாகும். போட்டி சிறப்பான முறையில் நடைபெற வேண்டிய நடவடிக்கை முழு வீச்சில் எடுத்து வருகிறோம். போட்டியை நடத்தும் எல்லா நாடுகளும், ஐ.சி.சி. யும் உற்சாகமான ஒத்துழைப்பு எடுத்து வருகிறன’ என்றார்.