பாப் மன்னன் மைக்கேல் ஜாக்சனின் உடல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இறந்து சுமார் 2 மாதங்களுக்கு பின் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. இதில் அவரது உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர். பாப் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த மைக்கேல் ஜாக்சன் கடந்த ஜூன் மாதம் 25ம் தேதி மரணமடைந்தார். அவரது மரணத்தால் ஏற்பட்ட சர்ச்சைகள் இரண்டு மாதங்களை தாண்டியும் ஓய்ந்தபாடில்லை.
அதேபோல் தான் அவரது உடல் அடக்கத்திலும் சர்ச்சை எழுந்தது. அவரது உடல் நெவர்லேன்ட் பண்ணையில் அடக்கம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது கைகூடவில்லை. இந்நிலையில் ஜாக்சனின் உடல் அடக்கத்துக்காக லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு வடக்கே சுமார் 13 கிமீ., தொலைவில் உள்ள பாரஸ்ட் லான் கிளன்டேல் பகுதியில் இடம் வாங்கப்பட்டதாக நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் அவரது வக்கீல் தெரிவித்தார்.
இந்நிலையில் நேற்று இரவு நடந்த அவரது உடல் அடக்க நிகழ்ச்சியில் ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர், ஜாக்சனின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சுமார் 200 பேர் கலந்து கொண்டனர். 7 மணிக்கு துவங்கவிருந்த இந்த இறுதி அஞ்சலி நிகழ்ச்சி ஜாக்சனின் பெற்றோர்கள் ஜோ மற்றும் காத்ரின் ஜாக்சன் தாமதமாக வந்ததால் சற்று தாமதமாக துவங்கியது. அவர்களுடன் ஜாக்சனின் மூன்று குழந்தைகளும் வந்திருந்தனர். பின்னர் இரவு 8.30 மணிக்கு உடல் அடக்கம் செய்யப்பட்டது.