நடிகர் விஜய்-க்கு எதிராக ஈரோடு, நாமக்கல், கரூர், கோவை போன்ற மாவட்டங்களில் பல இடங்களில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விஜய் அரசியலுக்கு வரப் போவதாக அவரே கூறியுள்ளார். அவரது தந்தையும், அவரும் சேர்ந்து மக்கள் இயக்கம் என்ற ஒன்றை ஆரம்பித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியில் சேரப் போவதாக கூறப்படுகிறது. இதற்காக ராகுல் காந்தியையும் விஜய் சமீபத்தில் சந்தித்துப் பேசினார். இளைஞர் காங்கிரஸ் பதவியைத் தந்தால் சேரத் தயார் என அவர் நிபந்தனை விதித்துள்ளதாகவும் ஒரு பேச்சு உள்ளது.
விஜய்யின் அரசியல் பிரவேசம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதைப் போலவே அவருக்கு கடும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இந்த நிலையில், ஈரோடு , நாமக்கல், கரூர், கோவை போன்ற மாவட்டங்களில் பெரியார் திராவிடர் கழகம் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அதில், இளைய தளபதியே நம்பி வந்த ரசிகர்களுக்கு துரோகமா என்ற தலைப்பில், பல்லாயிரம் ரசிகர்களை திரட்டி ஈழத் தமிழர்களுக்காக போரடிய நடிகர் விஜய் அவர்களே தமிழன படுகொலைக்கு துணை போன கங்கிரஸ் கட்சியுடன் நட்புக்கரமா மனசாட்சியுடன் சிந்திப்பீர் என வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த போஸ்டர்கள் விஜய் ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.