இலங்கையின் முதலாவது டின் மீன் உற்பத்தி கம்பனி காலி, கதுருதுவ வத்தையில் அமைக்கப்பட உள்ளதோடு, இதற்கான நிர்மாணப் பணிகள் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தென் மாகாண அபிவிருத்தி அதிகார சபை தலைவர் சட்டத்தரணி ஏ. பி. எஸ். ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.
இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அவர், டின் மீன் கம்பனி அமைப்பது தொடர்பாக நியூசிலாந்து நாட்டு கம்பனியொன்றுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யப்படவுள்ளது. இதனூடாக 1500 பேருக்கு நேரடியாக தொழில்வாய்ப்பு கிட்டும்/ இந்த கம்பனி அமைக்க 20 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு முதலீட்டு சபை, அமைச்சரவை என்பவற்றின் அனுமதி கிடைத்துள்ளன.
இங்கு உற்பத்தி செய்யப்படும் டின் மீன்கள் நியூசிலாந்து, இத்தாலி மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். கம்பனி நிர்மாணப் பணிகள் ஒக்டோபரில் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடத்தில் பூர்த்தி செய்யப்படும். கம்பனிக்குத் தேவையான இயந்திரங்களும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. அடுத்த வருட இறுதிக்குள் முதலாவது டின் மீன் சந்தைக்கு விடப்படும். இதனூடாக இறக்குமதி செய்யும் டின் மீன்களின் விலைகள் குறைவடையும்.