வடக்கில் யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களில் மிதிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளை விரைவு படுத்தும் வகையில் செலோவாக்கிய அரசாங்கத்திடமிருந்து இலங்கை அரசு 250 மில்லியன் ரூபா பெறுமதியான ஐந்து மிதிவெடியகற்றும் இயந்திரங்களைக் கொள்வனவு செய்துள்ளது.
இந்த இயந்திரங்களை மிதிவெடியகற்றும் பணிகளுக்கு உத்தியோகபூர்வமாகக் கையளிக்கும் வைபவம் நேற்றுக் காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்றது.
அமைச்சர்கள் ரிசாட் பதியுதீன், சரத்குமார குணரத்ன, தேச நிர்மாணம் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவி ருத்தி அமைச்சின் செயலாளர் டபிள்யூ. கே. கே. குமாரசிறி ஆகியோர் மேற்படி இயந்திரங்களை பாது காப்பு உயரதிகாரி மேஜர் ஜெனரல் தீபால் அல்விஸிடம் இவ்வியந்திரங்களைக் கையளித்தனர்.
இந்நிகழ்வின்போது கருத்துத் தெரிவித்த மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதியுதீன், வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை விரைவாக மீள அவர்களின் சொந்த இடங்களில் குடியேற்றுவதே அரசாங்கத்தின் நோக்கமெனத் தெரிவித்தார்.
கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் தற்போது இடம் பெற்று வருவதாகத் தெரிவித்த அமைச்சர் அதனை விரைவுபடுத்தும் நடவடிக்கைகளுக்காகவே ஐந்து புதிய இயந்திரங்களை அரசாங்கம் செலோவாக்கியாவிலிருந்து கொள்வனவு செய்துள்ளதாகவும் மேலும் சில இயந்தி ரங்களைக் கொள்வனவு செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டு ள்ளதாகவும் தெரிவித்தார்.