ராஜசேகர ரெட்டியின் உடல் அடக்கம் முடிந்த கையோடு அங்கு தற்போது முதல்வர் பதவியைப் பிடிக்கும் முயற்சிகள் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளன. ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆதரவாக 148 எம். எல். ஏக்கள் அணி திரண்டுள்ளனர்.
ஆனால் அவசரப்பட்டு அடுத்த முதல்வரைத் தீர்மானிக்க விரும்பாமல் நிதானமாக முடிவெடுக்க காங்கிரஸ் மேலிடம் திட்டமிட் டுள்ளது.
உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுப் பதை விட ஆந்திர நலனுக்கும், கட்சிக்கும் உகந்த முடிவை எடுக்க ஆர்வமாக உள்ளதாம் காங்கிரஸ் தலைமை. தற்போது ஆந்திர நிலையை கட்சி மேலிடம் உன் னிப்பாக கவனித்து வருவதாகவும் தெரிவிக் கப்படுகின்றது. இதன் காரணமாகவே ரோசய்யாவை உடனடியாக இடைக்கால முதல்வராக கட்சி மேலிடம் அறிவித்து அவரை உடனடியாக பதவியேற்கவும் செய்தது. எனவே நிதானமாக அடுத்த முதல்வரைத் தேர்ந்தெடுக்க முடியும் என்பது காங்கிரஸின் எண்ணம்.
2004ம் ஆண்டு காங்கிரஸ் மீண்டும் ஆந்திராவில் ஆட்சியைப் பிடிக்கக் காரணமே ராஜசேகர ரெட்டியின் அணுகுமுறைதான்.
அதுவரை பல்வேறு கோஷ்டிகளாக பிளவுபட்டுப் போயிருந்த காங்கிரஸை ஒன்றுபடுத்தி அனைவரையும் ஓரணியில் நிற்க வைத்தவர் ராஜசேகர ரெட்டி. ஒரே கட்சி, ஒரே கோஷ்டி என்ற அளவுக்கு காங்கிரஸை ஆந்திராவில் கட்டுக் கோப்பான கட்சியாக கடினப்பட்டு மாற்றி வைத்திருந்தார் ரெட்டி. இப்போது அவரது வாரிசைத் தேர்வு செய்யும் போது கட்சிக்குள் குழப்பமாகி, மறுபடியும் கட்சியில் பூசல்கள் வெடித்து விடாமல் இருக்க வேண்டும் என காங்கிரஸ் தலைமை யோசிக்கிறதாம்.
இருப்பினும், இப்போதைக்கு ஜெகன் மோகன் ரெட்டியின் கரம் தான் கட்சியில் ஓங்கியிருப்பதாக தெரிகிறது. அவரைத் தவிர வேறு யாரும் தெளிவான, வலுவான தலைவராக தெரியவில்லை. அதேசமயம், ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆதரவாக தீவிரமாக செயல்படுபவர்கள் இளம் எம்.பிக்கள், எம். எல். ஏக்கள்தான். அவர்களில் பெரும்பாலானோர் ராஜசேகர ரெட்டியால் அரசியல் அங்கீகாரம் தரப்பட்டவர்கள்.
மற்றபடி மூத்த தலைவர்களோ அல்லது மூத்த எம். எல். ஏ. எம். பியோ யாரும் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆதரவாக இவ்வளவு தீவிரமாக இல்லை என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆந்திர காங்கிரஸ் முழு ஆதரவுடன் இல்லை என்பதும் தெளிவாகியுள்ளது. தற்போது ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆதரவாக 36 அமைச்சர்கள் உட்பட 148 எம். எல். ஏக்களின் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. இதைத் தெரிவித்து கட்சித் தலைமைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாம்.