சர்வதேச புத்தக கண்காட்சியும், விற்பனையும் இம்மாதம் 19 ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகவுள்ளது. ஒன்பது தினங்களுக்கு நடைபெறும் இக் கண்காட்சியை கல்வியமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
பதினோராவது ஆண்டாக நடைபெறும் சர்வதேச புத்தக கண்காட்சியில் உள்ளூர் புத்தக வெளியீட்டாளர்களும், விற்பனையாளர்களுமாக 360 கண்காட்சி கூடங்களில் காட்சிப்படுத்த உள்ளதுடன் 40 வெளிநாட்டு வெளியீட்டாளர்களின் கண்காட்சி கூடங்களும் அமைக்கப்படவுள்ளன.
இவ்வாண்டு எதிர்பார்க்கப்படும் பெருந்திரளான மக்களை உள்ளடக்கக்கூடியதாக மிகவும் நுட்பமான முறையில் விற்பனைக் கூடங்களை அமைப்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக புத்தக கண்காட்சியின் பொதுச் செயலாளர் உபாலி வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
கண்காட்சி ஆரம்ப நிகழ்வின் போது சமூக, கலை, கலாசார பாரம்பரியங்களை எடுத்தியம்பும் விதத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. சிறந்த சிங்கள நூலுக்கு வழங்கப்படும் சுவர்ணா புத்தக விருது நிகழ்வும் அன்றைய தினம் நடைபெறவுள்ளது. முதல் சிறந்த நூலுக்கு 5 இலட்ச ரூபாவும் ஏனைய ஐந்து நூல்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபா வீதமும் வழங்கப்படவுள்ளதாக புத்தக வெளியீட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.