இடம்பெயர்ந்த மக்களுக்கென சேவையாற்றிய இந்திய மருத்துவக் குழு தனது பணியை முடித்துக்கொண்டு எதிர்வரும் 10ம் திகதி நாடு திரும்பவுள்ளது. இந்திய மருத்துவக் குழுவினரைப் பாராட்டும் நிகழ்வு எதிர்வரும் 9ம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.
கொழும்பு தாஜ் சமுத்திராவில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பிரதம அதிதியாக கலந்து கொள்வார். மருத்துவக் குழுவினரை பாராட்டும் இந்த நிகழ்வில், இந்தியா 25 மில்லியன் ரூபா பெறுமதியான மற்றொரு தொகுதி மருந்துப் பொருட்களை இலங்கைக்குக் கையளிக்கவுள்ளது.
இந்திய உயர் ஸ்தானிகர் ஆலோக் பிரசாத் இதனை வழங்குவார். 60 பேர் கொண்ட இந்திய மருத்துவக் குழு புல் மோட்டையில் மருத்துவமனை அமைத்துச் செயற்பட்டு வந்தது. பின்னர் வவுனியா நிவாரணக் கிராமங்களில் தனது பணிகளைத் தொடர்ந்தது. மெனிக் பாம் உட்பட பல நிவாரணக் கிராமங் களில் மூன்று மாத காலத்தில் சுமார் 42 ஆயிரம் நோயாளருக்குச் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.