தோட்டத் தொழிலாளர்களின் ஒத்துழையாமை தொழிற்சங்கப் போராட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தோட்டத் தொழிலாளர் சங்கங்கள் தெரிவித்தன.
இதேவேளை, நாளை திங்கட்கிழமை கொழும்பில் முதலாளிமார் சம்மேளனத்துடன் தோட்டத் தொழிற்சங்கங்களின் கூட்டுக் கமிட்டி பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 500 ரூபாவாக அதிகரிக்கும் வகையில் கூட்டு ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட வேண்டுமென்ற நிபந்தனையை முன்வைத்து தொழிற்சங்கக் கூட்டுக் கமிட்டி முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சு நடத்திய போதும், சம்மேளனம் அதற்கு இணங்காமையினால் பேச்சுவார்த்தை தொடர்ந்தும் இழுபறியிலேயே இருந்து வருகிறது.
இந்நிலையில், தமது கோரிக்கைக்கு முடிவு காணப்பட வேண்டுமெனக் கோரி, கூட்டு கமிட்டியின் ஆதரவுடன் பெருந்தோட்டத் துறையைச் சேர்ந்த தொழிலாளர்கள் அடையாள தொழிற்சங்கப் போராட்டமாக ஒத்துழையாமை போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
நாளைய பேச்சுவார்த்தையும் சாதகமாக முடியாத பட்சத்தில் ஒத்துழையாமை போராட்டம் தொடர்ந்தும் கடுமையாக முன்னெடுக்கப்படுமெனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் மு. சிவலிங்கம் கூறினார்.
தோட்டத் தொழிலாளிகளின் அடிப்படைச் சம்பளத்தில் அதிகரிப்பை ஏற்படுத்தக் கோரி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், தோட்ட தொழிற்சங்க கூட்டு கமிட்டி ஆகியனவே முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சு நடத்தி வருகின்றன.