271 கிராம் எடையுள்ள ஹெரோயின் போதை பொருள் வைத்திருந்த பாகிஸ்தான் பிரஜைகள் இருவர் உட்பட ஆறு பேரை போதைவஸ்து தடுப்புப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இலங்கைக்கு ஹெரோயினை கடத்தி வந்த இரு பாகிஸ்தான் பிரஜைகளை கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வைத்தும், அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய இலங்கையர்கள் நால்வரை கொம்பனித்தெருவில் வைத்தும் கடந்த 4ம் திகதி பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெதிவக தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட ஆறு பேரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது மொத்தமாக 271 கிராம் எடையுள்ள ஹெரோயினை மீட்டெடுத்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது :-பாகிஸ்தான் கராச்சியைச் சேர்ந்த மொஹம்மட் ரபீக் மொஹம்மட் அஹமட், ரம்சான் மொஹம்மட் அப்துல் கரீப் ஆகிய இருவரையும் கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வைத்து போதைவஸ்து தடுப்புப் பிரிவு பொலிஸார் கைதுசெய்து கடுமையான விசாரணைக்கு ட்படுத்தியுள்ளனர்.
அஹமட் என்பவரிடமிருந்து 97 கிராம் ஹெரோயினையும், கரீம் என்பவரிடமிருந்து 91 கிராம் ஹெரோயினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இவர்கள் இருவரும் வழங்கிய தகவல்களை அடுத்து கொம்பனித்தெரு பிரதேசத்திலிருந்து நான்கு இலங்கையர்களை கைது செய்துள்ளனர். இவர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் 50, 10, 12, 09 கிராம் எடையுள்ள ஹெரோயின்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பாகிஸ்தான் பிரஜையான மொஹம்மட் ரபீக் மொஹம்மட் அஹமத் என்பவர் 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் இதுவரை 11 தடவைகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளார் என்றும் ரம்சான் மொஹம்மட் அப்துல் கரீம் என்பவர் 2008ம் ஆண்டு நவம்பர் முதல் இதுவரை ஆறு தடவைகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளார் என்றும் ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.