சீன கடற்பரப்பில் உருவாகியுள்ள சூறாவளி காரணமாகவே இலங்கையில் காற்றின் வேகம் அதிகரித்திருப்பதாக வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் சமிந்த டி சில்வா நேற்றுத் தெரிவித்தார்.
இந்த நாட்களில் இலங்கையின் கிழக்கு, தென் கிழக்கு, மற்றும் மன்னார் குடா கடற்பரப்புக்களில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையோடு நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் :-
சீனாவுக்கு அருகில் கடற் பரப்பில் சூறாவளி ஏற்பட்டிருக்கின்றது. இதன் காரணத்தினால் இந்த நாட்களில் இலங்கைக்கு தென்மேற்காக காற்று வீசுகின்றது. மணித்தியாலயத்திற்கு 40 – 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுகின்ற காற்று சில சமயம் 60 – 70 கிலோ மீட்டர் வரையும் அதிகரிக்க முடியும்.
அதனால் கிழக்கு, தென் கிழக்கு மற்றும் மன்னார் குடாவில் மீன்பிடிப்பவர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையோடு நடந்துகொள்ள வேண்டும். இந்த நிலைமை அடுத்துவரும் இரண்டொரு தினங்களுக்கு நீடிக்க முடியும் என்றார்.