ஆப்கானிஸ்தானில் நேட்டோப் படைகள் நடத்திய வான் தாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை ஐரோப்பிய யூனியன் வெளிநாட்டமைச்சர்கள் கண்டித்துள்ளனர். ஆப்கான் மக்களைக் கொல்வதால் அங்கு சமாதானத்தைக் கொண்டு வரமுடியாதென சுவீடன் வெளிநாட்டமைச்சர் சொன்னார்.
தலிபான்களால் கடத்தி வரப்பட்ட இரண்டு லொறிகளும் ஜேர்மன் படையினர் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தும் நோக்குடன் கொண்டு வரப்பட்டது. இதைத் தவிர்க்கவே லொறிகளைத் தாக்க வேண்டியேற்பட்டதாக ஜேர்மன் வெளிநாட்டமைச்சர் சொன்னார்.
தலிபான்கள் ஆறு கிலோ மீற்றர் தொலைகளுக்குள்ளே நின்று ஜேர்மன் படையினரை தாக்கப் புறப்பட்டனர். இதைத் தடுக்காவிட்டால் பெருமளவான ஜேர்மன் வீரர்கள் உயிரிழந்திருப்பர் என்றும் ஜேர்மன் வெளிநாட்டமைச்சர் குறிப்பட்டார். நேட்டோ படையினரின் தாக்குதல் மிகப் பெரிய தவறு என்று பிரான்ஸ் வெளிநாட்டமைச்சர் கண்டித்தார்.
ஆப்கானிஸ்தானில் சென்ற வெள்ளிக்கிழமை தலிபான்கள் கடத்தி வந்த இரண்டு எரிபொருள் நிரப்பப்பட்ட லொறிகள் நேட்டோப் படையினால் தாக்கப்பட்டது. இதில் சுமார் 90 பேர் பலியாகினர். இவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்களாவர்.
பொதுமக்களைப் பொருட்படுத்தாது நடத்தப்பட்ட இத்தாக்குதலுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இதையடுத்தே ஐரோப்பிய யூனியன் வெளிநாட்டமைச்சர்கள் இத்தாக்குதலைக் கண்டித்துள்ளனர்.
ஜேர்மன் வீரர்களே இந்த வான் தாக்குதலை நடத்தினர். இத்தாக்குதலை இத்தாலியும் கண்டித்துள்ளது. இது குறித்து பாரபட்சமற்ற விரிவான விசாரணைகள் நடத்தப்படுமென ஐரோப்பிய யூனியன் உறுதியளித்துள்ளது. ஐரோப்பிய யூனியனுக்கு சுவீடன் தலைமை தாங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.