இலங் கையின் கிழக்கே திருகோணமலையின் சம்பூர் பகுதியில் இருக்கின்ற உயர்பாதுகாப்பு வலயப் பகுதியில் அனல் மின் நிலையம் அமைப்பதற்காக இந்தியாவின் தேசிய அனல் மின் நிலையத்தின் உயர்மட்ட குழு இலங்கை வந்துள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த இலங்கை மின்துறை அமைச்சர் ஜான் செனிவரத்ன, அனல் மின் நிலையத்திற்கான இடம் அடையாளம் காணப்பட்டு விட்டதாகவும் இதில் முதற்கட்ட பணிகள் இடம்பெற்று வருவதாகவும் கூறினார்.
மேலும் இந்த பகுதியில் அனல் மின் நிலையம் அமைக்கப்படும் போது, இந்த பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்படும் என்றும், மக்களை மீள்குடியேற்ற அங்கு வேறு இடங்கள் ஏராளமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
எனினும் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையில் இடைத்தங்கல் முகாம்களில் இருக்கும் சம்பூரில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்களுடைய பகுதியில் அனல் மின் நிலையம் அமைப்பதற்கு தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக தாங்கள் இந்திய உயர்மட்ட குழுவை சந்தித்து நிலைமையை விவரிக்கவுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கே. துரை ரட்ணசிங்கம் கூறினார்.