உயர் கல்வி பெறும் உரிமை சிறுபகுதியினருக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படக் கூடாது -ஜனாதிபதி

slprasident.jpgபொது மக்களின் நன்மைக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் பிரஜைகளை உருவாக்குவதே உயர் கல்வியின் முக்கிய நோக்கமாக அமைய வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

உயர் கல்வியைப் பெற்றுக்கொள்ளும் உரிமை நாட்டின் சிறு பகுதியினருக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படக் கூடாது என தெரிவித்த ஜனாதிபதி சகல மாணவர்களுக்கும் அந்த உரிமை பெற்றுக்கொடுக்கப்பட வேண்டியதெனவும் தெரிவித்தார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற கொழும்பு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

சிரேஷ்ட அமைச்சர்கள் கல்விமான்கள், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது :-பட்டம் பெறுவதற்காக பல்கலைக்கழகத்துக்குள் பிரவேசிக்கும் சகல மாணவர்களுக்கும் சமூகப் பொறுப்பு உண்டு என்பதை எவரும் மறந்துவிடக் கூடாது. பல்கலைக்கழக மாணவர்கள் கோரிக்கைக்கும், அழுத்தத்துக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கும் தம்மை உள்ளாக்கிக் கொள்பவர்கள் அல்லர். அவர்கள் தமக்குரிய சமூக பொறுப்பினை உணர்ந்து செயற்பட வேண்டியது அவசியம்.

சிறந்த முன்னுதாரணமானவர்களாக அவர்கள் பல்கலைக்கழகத்திலும் சமூகத்திலும் விளங்க வேண்டும். அத்துடன் தாய்நாட்டின் மீதும் சுற்றுச் சூழல் மீதும் நாட்டின் பொருளாதாரத்தின் மீதும் சிறந்த தெளிவைப் பெற்றுக்கொண்டிருத்தல் அவசியம்.

அதேபோன்று பட்டதாரிகள் ஆங்கில மொழித் தேர்ச்சி போன்று தகவல் தொழில்நுட்ப அறிவை வளர்த்துக்கொள்வதிலும் கவனம் செலுத்துவது அதிகரிக்கப்பட வேண்டும். பொது மனித நலன்கள் தொடர்பில் அர்ப்பணிப்புடன் செயற்படுபவராக பட்டதாரிகள் உருவாக்கப்படுவது அவசியமெனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *