ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குக் கொழும்பு பல்கலைக்கழகம் நேற்று கெளரவ சட்டக் கலாநிதி பட்டம் வழங்கி கெளரவித்தது. கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம் பெற்ற பட்டமளிப்பு நிகழ்வில் பல்கலைக்கழக வேந்தர் பேரருட்திரு ஒஸ்வோல்ட் கோமிஸ் ஆண்டகை ஜனாதிபதிக்கு இக் கெளரவ பட்டத்தை வழங்கி கெளரவித்தார்.
இந் நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவுக்கும் கெளரவ இலக்கியக் கலாநிதி பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டது. பயங்கரவாதத்திலிருந்து நாட்டைப் பாதுகாத்து ஐக்கிய இலங்கையைக் கட்டியெழுப்புவதில் அர்ப்பணிப்புடனும் தூரதரிசனத்துடனும் செயற்பட்டமையைப் பாராட்டியே கொழும்பு பல்லைக்கழகம் இவர்களுக்கு இந்த கெளரவ கலாநிதிப் பட்டத்தை வழங்கிக் கெளரவித்தது.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நேற்றுப் பிற்பகல் பல்கலைக்கழக வேந்தர் பேரருட்திரு ஒஸ்வோல்ட் கோமிஸ் ஆண்டகையின் தலைமையில் நடைபெற்றது. சிரேஷ்ட அமைச்சர்கள், கல்விமான்கள், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந் நிகழ்வில் தாய்நாட்டுக்காக ஜனாதிபதி ஆற்றிய சேவை மற்றும் அவரது குடும்பத்தினர்களின் சேவையும் எடுத்துக் கூறப்பட்டதுடன் ஜனாதிபதியின் தூரதரிசனமும் சிறந்த தலைமைத்துவம் பற்றியும் பாராட்டப்பட்டது.
நேற்றைய இந் நிகழ்வில் மேலும் 20 பேர் தத்துவக் கலைமாணி மற்றும் முதுகலை மாணி பட்டங்களை ஜனாதிபதியிடமிருந்து பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.