வவுனியா நிவாரண கிராமங்களிலிருந்து 10 ஆயிரம் பேர் தப்பிச் சென்றதாக பரப்பப்படும் செய்தி ஆதார மற்றதெனவும், மாவட்ட செயலக வட்டாரங்களினால் எந்தவொரு ஊடகத்துக்கோ அல்லது அமைப்புக்கோ இது பற்றி எந்தவித தகவல்களும் வழங்கப்படவில்லை எனவும் வவுனியா மாவட்டச் செயலாளர் கூறுகின்றார்.
மாவட்ட செயலாளரின் பணிப்புரையின் பேரில் மேலதிக அரசாங்க அதிபரினால் வெளியிடப்பட்டுள்ள பத்திரிகை அறிக்கையொன்றிலேயே மேற்படி மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இக்குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை ஒன்றை வவுனியா மாவட்ட செயலாளர் ஆரம்பித்துள்ளதாகவும், அவ்விசாரணை பூர்த்தியடைந்ததும் அது பற்றிய தகவல்கள் ஊடகங்களுக்கு தெரிவிக்கப்படுமென்றும் அவ்அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பணம் செலுத்தி தரகர்களினூடாக தப்பிச் செல்ல இடம்பெயர்ந்த மக்கள் சிலர் முயல்வதாக மாவட்ட செயலகத்துக்கு முன்னர் தகவல் கிடைத்திருந்ததாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நிவாரண கிராமங்களிலிருந்து 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் தப்பிச் சென்றதாக கூறப்படும் பிரசாரங்கள் அறிந்ததே.