ஜப்பானிய அனைத்துலக வானூர்தி நிலையத்தில் சிறிலங்கா பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின் விரல் ரேகை நேற்று சனிக்கிழமை பதிவு செய்யப்பட்டதுடன், அவர் 30 நிமிடங்களுக்கும் மேலாகத் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டுள்ளார்.
மிக முக்கிய நபர்களுக்கு (விஐபி) வழங்கப்படும் மதிப்பு பிரதமருக்கு ஜப்பானின் நரிட்டா வானூர்தி நிலையத்தில் வழங்கப்படவில்லை என்றும் சாதாரண பயணிகள் பின்பற்றும் நடைமுறையைப் பின்பற்றுமாறு அவர் நிர்ப்பந்திக்கப்பட்டார் எனவும் அவருடன் வானூர்தியில் பயணம் செய்த பயணி ஒருவர் தெரிவித்தார்.
ஜப்பானுக்கு சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டு பிரதமர் சென்றுள்ளார். கோபேயில் இருந்த ஜப்பானிய ஆலயம் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு ஒன்றில் பிரதமர் கலந்துகொள்ள வேண்டி இருந்தபோதும் அவர் விரைவாக வானூர்தி நிலையத்தைவிட்டு வெளியேற அனுமதிக்கப்படவில்லை.
இது தொடர்பாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சிடம் கேட்டபோது, வானூர்தி நிலையத்தில் நடைமுறைத் தாமதம் ஏற்பட்டதாலேயே பிரதமருக்கு மிக முக்கிய நபர்களுக்கு வழங்கப்படும் மதிப்பு தவிர்க்கப்பட்டதாகக் கூறினர்.
இந்தச் சம்பவம் குறித்து ஜப்பானில் உள்ள சிறிலங்கா தூதரகத்திடம் இருந்து அறிக்கை ஒன்றை அமைச்சர் ரோகித போகல்லாகம் கேட்டுள்ளார் எனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.