இங்கி லாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் ஆஸ்ட்ரேலிய அணி 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 7 போட்டிகள் கொண்ட நாட்-வெஸ்ட் தொடரில் 2-0 என்ற போட்டிக் கணக்கில் ஆஸ்ட்ரேலியா முன்னிலை பெற்றுள்ளது.
இங்கிலாந்து- ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 249 ஓட்டங்கள் சேர்த்தது.
பெர்குசன் 55 ஓட்டங்களும், கேமரூன் ஒயிட் 42 ஓட்டங்களும், வாட்சன் 34 ஓட்டங்களும் எடுத்தனர். இறுதிகட்டத்தில் அதிரடியாக விளையாடிய மிட்செல் ஜான்சன் 23 பந்துகளில் 43 ஓட்டங்கள் எடுத்தார்.
வெற்றி பெற 250 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஸ்டிராஸ் (47 ஓட்டங்கள்), ரவி போபரா (27 ஓட்டங்கள்) இணை முதல் விக்கெட்டுக்கு 74 ஓட்டங்கள் சேர்த்து சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தது.
ஆனால் அடுத்து விளையாடிய வீரர்கள் ஆஸ்ட்ரேலிய பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்ததால் இங்கிலாந்து அணி சரிவுக்குள்ளானது. காலிங்வுட் இறுதி வரை போராடியும் பலன் கிடைக்கவில்லை.
கடைசி விக்கெட்டாக காலிங்வுட் (56 ஓட்டங்கள்) பிரெட்லீ பந்து வீச்சில் போல்டு ஆக, இங்கிலாந்து அணி 46.1 ஓவர்களில் 210 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம் 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
ஆஸ்ட்ரேலியா தரப்பில் பிரெட்லீ, பிராக்கன், ஜான்சன், வாட்சன் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது ஒரு நாள் போட்டி வரும் 9ஆம் தேதி நடக்கிறது.