அமெரிக் காவின் நியூயார்க்கில் நடந்து வரும் யு.எஸ். ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் தோல்வியடைந்தார்.
நடந்து முடிந்த இப்போட்டியில் பெல்ஜியம் வீராங்கனை கிம் கிளிஸ்டர்ஸ், வீனஸ் வில்லியம்ஸை எதிர்த்து விளையாடினார். முதல் செட்டை 6-0 என்ற புள்ளிக்கணக்கில் கிளிஸ்டர்ஸ் வென்றார்.
அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக 6-0 என்ற புள்ளிக்கணக்கில் 2வது செட்டை வீனஸ் கைப்பற்றினார். வெற்றியை நிர்ணயிக்கும் 3வது மற்றும் இறுதி செட் ஆட்டத்தில் கிளிஸ்டர்ஸ் சிறப்பாக விளையாடி 6-4 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றி, வீனஸை வீழ்த்தினார்.
குழந்தை பெற்றுக் கொண்ட பின்னர் கடந்த 2 ஆண்டுகளாக சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த கிளிஸ்டர்ஸ், இந்த யு.எஸ். ஓபன் தொடரில் மீண்டும் களமிறங்கினார். வீனஸ் வில்லியம்ஸை வீழ்த்தியதன் மூலம் அவர் காலிறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.