மத்திய அரச துறையிலிருந்து மாகாண சபைக்குச் சென்றுள்ள அரச உத்தியோகத்தர்கள் அங்கு ஐந்து வருடங்கள் பூர்த்தியானதும் மீள அரச சேவைக்கு வருவது அவசியமென பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார்.
இதனை முறையாக நடைமுறைப்படுத்துவதை உறுதிசெய்யும் வகையில் அமைச்சின் செயலாளர் டி. திசாநாயக்க தலைமையில் குழுவொன்றை அமைத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மத்திய அரச துறையிலிருந்து ஐந்து வருடங்களுக்கென மாகாண சபை சேவைக்குச் செல்லும் அரச உத்தியோகத்தர்கள் நிரந்தரமாக அங்கு தங்கி வருவதால் மாகாண சபையிலுள்ளவர்களுக்கான பதவியுயர்வு உட்பட பல சலுகைகள் தடைப்படுகின்றன. இதனை நிவர்த்தி செய்யும் வகையிலேயே ஐந்து வருடம் கட்டாயமாக்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் :- மத்திய அரச துறையிலிருந்து மாகாண சபைக்கு சுமார் 300 பேர் சென்றுள்ளனர். இவர்களை மீள அரச சேவைக்குத் திருப்பி அழைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் உரை நிகழ்த்திய அமைச்சர் சந்திரசிறி கஜதீர; அரச துறைகளை விரிவாக்குவதற்குப் பதிலாக அதனை மட்டுப்படுத்த செயற்பட்ட காலகட்டமொன்று இருந்துள்ளது. தற்போது அரச துறை மேம்பாட்டுக்காக அரசாங்கம் பெருமளவு நிதியினை செலவிட்டு வருகிறது. கட்டடங்கள் மட்டுமன்றி அரச துறையின் வெற்றிடங்கள் அனைத்தும் நிரப்பப்பட்டு வருகின்றன எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் திஸ்ஸ விதாரண எஸ். எல். எஸ். தரச் சான்றிதழ் போன்றே வெளிநாடுகளிலிருந்து வரும் பொருட்களின் தரத்தை தரப்படுத்தவும் தரநிர்ணய நிறுவனமொன்றின் மூலம் நடவடிக்கை உருவாக்கப்படுமென தெரிவித்தார்.