சிறிலங்காவுக்கு ஆயுதங்களை விற்க வேண்டாம் என ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்திருந்தபோதும் செக் குடியரசு நான்காம் கட்ட ஈழப் போரின் முக்கிய காலப் பகுதியில் சிறிலங்காவுக்கு ஆயுதங்களை விநியோகம் செய்தது எனத் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக ரி-55 ரக டாங்கிகள் நாற்பதை அது வழங்கியுள்ளது. செக் குடியரசைச் சேர்ந்த ஆயுத விற்பனை முகவரான மிச்சல் சிமாஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.
வெளிப்படையான சண்டை நடைபெறும் இடங்களுக்கு ஆயுதங்களை விற்பனை செய்யக்கூடாது என ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது. செக் குடியரசு ஒன்றியத்தின் உறுப்பு நாடாகையால் இந்தத் தடை அதற்கும் பொருந்தும். இதன் அடிப்படையில் சிறிலங்கா அரசுக்கும் அது ஆயுதங்களை விற்பனை செய்ய முடியாது.
ஆனாலும் இவற்றை எல்லாம் மீறி நான்காம் ஈழப் போர் கால கட்டத்தில் செக் குடியரசு சிறிலங்காவுக்கு வெளியே தெரியாமல் ஆயுதங்களை விற்பனை செய்தது என்பதை மிச்சல் சிமாஸ் உறுதிப்படுத்தினார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி நோர்வே மற்றும் சுவீடன் நாடுகள் சிறிலங்காவுக்கான செக் குடியரசின் ஆயுத விற்பனையைத் தடுக்க முயற்சித்தன எனவும் அவர் குற்றம் சாட்டினார். அதிகரித்து வந்த அழுத்தம் காரணமாக இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் சிறிலங்காவுக்கு ஆயுதங்களை விற்பதற்கான அனுமதிகள் எவையும் வழங்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
விடுதலைப் புலிகள் அமைப்புக்கு தமது நாடு ஒருபோதும் ஆயுதங்களை விற்பனை செய்ததில்லை எனக் கூறிய அவர், மியான்மர் (பர்மா) அல்லது வடகொரியா போன்ற இரண்டாம் தரப்புக்கள் மூலமாக கொள்வனவுக் கட்டளைகளைச் சமர்ப்பித்து அவர்கள் ஆயுதங்களைப் பெற்றிருக்கலாம் எனவும் தெளிவுபடுத்தினார்.
விடுதலைப் புலிகளிடம் இருந்த செக் தயாரிப்பான இரு சிலின் ரக வானூர்திகள் குறித்துக் கேட்டதற்கு, அதன் தொடர் இலக்கங்களை வைத்து தாம் மேற்கொண்ட விசாரணையில் அவை முன்னர் கனடாவைச் சேர்ந்த வானூர்தி செலுத்துனர் பயிற்சிப் பள்ளி ஒன்றிடம் இருந்தவை என்பதைக் கண்டறிந்துள்ளனர் என்றார்.