சர்வதேச மக்களாட்சி நாள் (International Day of Democracy) – புன்னியாமீன்

international-day-of-democracy.jpgசர்வதேச மக்களாட்சி நாள் ஆண்டு தோறும் செப்டெம்பர் 15 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுகிறது. நவம்பர் 8,  2007 இல் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபைக் கூட்டப் பிரகடனப்படியே   அனைத்துலக மக்களாட்சி நாள் கொண்டாடப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.  ஐக்கிய நாடுகள் சபையின்  இப்பொதுத் தீர்மானத்தை 192 உறுப்பு நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன.

உலகளாவிய ரீதியில் எந்தவொரு தனிமனிதனும் தனது சொந்த அரசியல்,  பொருளாதாரம்,  சமூக மற்றும் கலாசார நடவடிக்கைகளை தனது வாழ்நாளில் அனுபவிக்கும் உரிமை கொண்டவன் ஆவான் என  பொதுச்சபைத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய உலகிலுள்ள அனைத்து நாடுகளினதும் பிரதிநிதிகள்,  ஐ.நா.வின் சகல அமைப்புகள்,  அரச அமைப்புகள்,  அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தனியார் அமைப்புகள் அனைத்தும் இத்தினத்தைக் கொண்டாட வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபை கேட்டுள்ளது.

உலகில் காணப்படும் அரசியல் முறைக் கோட்பாடுகளுள் ஜனநாயகக் கோட்பாடும் ஒன்றாகும். பொதுவாக ஜனநாயகம் என்பது மக்களாட்சியைக் குறிக்கும். மக்களாட்சியை ஆங்கிலத்தில் டெமாக்ரசி  (Democracy)  என்பர். டெமாக்ரசி என்ற சொல் டெமோஸ் (Demos) கிராட்டோஸ் (Kratos)  என்ற இரண்டு சொற்களிலிருந்து தோன்றியது. டெமோஸ் என்பதற்கு மக்கள் என்றும் கிராட்டோஸ் என்பதற்கு அதிகாரம் அல்லது ஆட்சி என்றும் பொருள் கொள்ளப்படும்

“மக்களாட்சி என்பது பலருடைய அரசாங்கம்” என்று கிரேக்க அறிஞர் பிளேட்டோ வரைவிலக்கணப்படுத்தினார் அரிஸ்டாட்டில் மக்களாட்சி ஏழ்மை நிலையிலுள்ளோர் தங்களுக்காக நடத்தும் ஆட்சி என்று கூறினார். ‘மக்களால்  மக்களுக்காக மக்களால் புரியப்படும் ஆட்சி முறையே மக்களாட்சி ஆகும். அதாவது மக்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசே மக்களாட்சி அரசாகும். எனவே மக்களாட்சி அரசில் மக்களுக்காகவே ஆட்சி மேற்கொள்ளப்படும்.” என்று முன்னாள் அமெரிக்க குடியரசின் ஜனாதிபதி  ஆபிரகாம் லிங்கன் தெளிவு படுத்தினார்.மேலும் அரசியல் அறிஞர் ராபர்ட்டால் அவர்களின் கருத்துப்படி ‘சாதாரண மனிதர்களும் அரசியல் தலைவர்களைக் கட்டுப்படுத்தக்கூடிய அதிகாரத்தைப் பெற்றுள்ள ஆட்சி முறை ஜனநாயகமாகும்” என்றார்.

தற்போது உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளில் இந்த  ஆட்சி முறையே நடைமுறையில் உள்ளது. பொதுவாக ஒரு நாட்டின் மக்கள்,  தங்களின் கருத்துக்களைத் தேர்தலின் மூலம் பதிவு செய்து,  தங்கள் பிரதிநிதிளைத் தேர்ந்தெடுப்பர். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தனிக்கட்சியாகவோ அல்லது ஏனைய கட்சிகளுடன்  கூட்டணியாகவோ ஆட்சி செய்வர். எனவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்களுக்காகவே ஆட்சி செய்ய வேண்டும். மக்களின் தேவை அறிந்து மக்களுக்கு சேவையற்ற வேண்டும். ஆகவே இங்கு மக்கள்பிரதிநிதி என்பவர் மக்கள் சேவகரே. கோட்பாட்டு ரீதியாக விளக்கம் அழகாக காணப்பட்டாலும் கூட ஆட்சிக்கு வரும் வரை மக்கள் சேவகர்களாக காட்டிக் கொள்ளும் இவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் மாறி விடுவது பொதுவாக ஜனநாயக நாடுகளில் காணக்கூடிய நடைமுறை நிலைப்படாகும்.

ஜனநாயகத்தின்  அளவைத் தீர்மானிப்பது  ‘ஜனநாயக சுட்டெண்” ஆகும். ஜனவரி 2007 இல் ‘தி எக்கொனொமிஸ்ட்” இதழ் வெளியிட்ட மதிப்பீடுகளின் படி மொத்தமான 10 புள்ளிகளில் 9.5 புள்ளிகளும் புள்ளிகளுக்கு மேலும் பெற்றுள்ள நாடுகள் சிறந்த ஜனாநாயக நாடுகளாக இனங்காட்டப்படுகிறன. மேற்படி புள்ளி விபரத்தின் அடிப்படையில் சுவீடன் 9.88 புள்ளிகளுடன் அதி கூடிய மக்களாட்சிப் பண்பு  கொண்ட நாடாக குறிப்பிடப்பட்டிருந்தது. வட கொரியா 1.03 புள்ளிகளுடன் மிகக் குறைந்த மக்களாட்சிச் சுட்டெண் உடைய நாடாகும்.

உலகத்தில் பல பகுதிகளிலும் உள்ள அரசியல் கோட்பாடுகளில் மக்களாட்சி என்பது ஒரு சிறந்த ஆட்சிமுறை என்று பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. ஜனநாயகம் எனும் மக்களாட்சி முறை சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் உலகில் தோன்றி மறைந்து,  அதன் பின் 2000 ஆண்டுகள் கழித்து மறுபடியும் உருவாகி 20 ஆம் நூற்றாண்டில் பலமான ஓர் ஆட்சிமுறையாக உலகெங்கிலும் உருவானது. இதனை மேலும் தெளிவு படுத்துவதாயின் பழங்கால கிரேக்க ரோமானிய அரசுகளில் மக்களாட்சி கொள்கை பின்பற்றப்பட்டது. இடைக்காலத்தில் மக்களாட்சி முறையில் சில இடர்பாடுகள் ஏற்பட்டன. ஆனால் அமெரிக்க சுதந்திரப்போர்,  பிரான்சியப் புரட்சி, ரஷ்யப் புரட்சி போன்றவற்றால் மன்னராட்சிக்கு மாற்றாக மக்களாட்சி என்ற புரட்சிக் கருத்திற்கு செயல்வடிவம் கொடுத்தன. அதனடிப்படையில் மக்களாட்சி முறை பல நாடுகளில் ஏற்பட்டது.

மக்களாட்சி முறையில் நேரடி மக்களாட்சி,  மறைமுக மக்களாட்சி என இருவகைகள் உள்ளன. நேரடி மக்களாட்சியில் அரசாங்க செயல்பாடுகளில் மக்கள் நேரிடையாக பங்கேற்கின்றனர். அரசாங்கத்தில் தீர்மானங்களை உருவாக்கும் வகையில் மக்கள் நேரிடையாக தொடர்பு கொண்டிருந்தனர். பழங்கால கிரேக்க ரோமானிய நாடுகளில் இம்முறையான மக்களாட்சி நடைபெற்றது. இம்முறையான மக்களாட்சி இடைக்காலத்தில் இத்தாலிய அரசுகளிடையே புதுப்பிக்கப்பட்டது. பழங்கால இந்தியாவில் நேரடி மக்களாட்சிக் கருத்துப்படி கிராம பஞ்சாயத்து முறை செயல்பட்டு வந்தது.

20ம் நூற்றாண்டில் பெரிய நாடுகளில் இக்கருத்து ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதற்கு காரணம்,  மக்கள் தொகைப் பெருக்கமே ஆகும். எனவே மறைமுக மக்களாட்சி முறையில் மக்கள் அவர்களின் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கின்றனர். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஆட்சி அமைத்து அரசாங்கத்தை நடத்துகின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலம் மக்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துகின்றனர். உலகின் பல நாடுகளில் இம்முறையே பின்பற்றப்படுகிறது.
 
ஜனநாயக ஆட்சி முக்கிய இரண்டு அம்சங்கள் காணப்படுகின்றன. அவை சமத்துவம்,  சுதந்திரம் என்பனவாகும்.

இங்கு சமத்துவம் எனும் போது இது விரிவான விளக்கப்பரப்பைக் கொண்ட போதிலும் கூட சுருக்கமாக ‘உரிமைகளைப் பொருத்தமட்டில் எல்லோரும் சமம்” என்பதையே எடுத்தக்காட்டுகின்றது. அமெரிக்க சுதந்திர பிரகடனத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. ‘சகலரும் சம உரிமைகளுடன் படைக்கப்பட்டுள்ளனர் என்பதை ஒப்புக் கொள்கிறோம்”, 1789ல் பிரான்சின் உரிமைப்பிரகடனம் பின்வருமாறு கூறுகின்றது. ‘மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரை சம உரிமைகளை உடையவர்கள்.,  இவற்றின் கருத்து குடிகள் என்ற ஒவ்வொருவருக்கும் எல்லோருடைய உரிமைகளும் சமமாகும்” என்பதாகும். குடியாட்சி வெற்றி பெற வேண்டுமாயின் மக்களுடைய சமத்துவம் நிலவ வேண்டியது அவசியமாகும்.

“எல்லா மக்களுக்கும் அரசில் பதவி வகிக்கவும்,  பொது சட்டதிட்டங்களை உருவாக்கவும் உரிமை உண்டு எனும் விதி மேலெழுந்தவாரியாக நோக்கும்போது சிறப்பாகத் தெரிகிறது. கல்வியறிவு இல்லாதவர்கள் நல்லவர்களைத் தேர்ந்தெடுப்பதில்லை எனவும்,  இதுமாதிரியான மக்களை டெமஃகாக் என அழைக்கப்படும் மேடைப் பேச்சு வல்லுநர்களான தலைவர்கள் தவறான விளக்கங்களை அளித்து கெட்ட பாதைக்கு இட்டுச்சென்று அவர்களது ஆதரவைப் பெற்று ஆட்சி அமைத்து விடுவார்கள் என்றும் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னரே அரசியல் ஞானிகளான பிளாட்டோவும் அவரது ஆசான் சோக்ரட்டீசும் சொல்லி இருப்பது ஆச்சரியப்பட வைக்கிறது. நடப்பு அரசியலை 25 நூற்றாண்டுகளுக்கு முன்பே கணித்திருக்கிறார்கள் என்பது தான் அதிசயம்.
 
ஜனநாயக ஆட்சி முறையில் மக்களுக்கு சுதந்திரம் இருத்தல் மற்றைய பிரதான பண்பாகும். எவ்வாறாயினும் ஒருவரது சுதந்திரத்தால் இன்னொருவர் சுதந்திரம் பாதிப்படையதல் கூடாது. சுதந்திரத்தைப் பிரதானமாக பின்வருமாறு வகைப்படுத்தலாம். அரசியல் சுதந்திரம்,  பொருளாதார சுதந்திரம்,  சமய சுதந்திரம்

அரசியல் சுதந்திரம் எனும் போது புராதன கிரேக்க ஆட்சிகளைப் போல இன்று நேரடியான மக்களாட்சி முறையைக் காணமுடியாது. எனவே இன்று காலத்திற்குக் காலம் நடைபெறும் தேர்தல்கள் மூலம் தமது சார்பில் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து தமக்கு விருப்பமான அரசாங்கத்தை அமைத்துக் கொள்வதற்கு மக்கள் உரிமை பெற்றுள்ளனர். இது மக்களாட்சி முறையின் மிகவும் சிறப்பானதொரு விடயமாகும். எனவேதான் மக்களாட்சியில் அரசியல் சுதந்திரம் முக்கிய இடத்தை விக்கின்றது.

இத்தேர்தல்களில் தமது பிரதிநிதிகளைச் சர்வசன வாக்குரிமை மூலம் தெரிவு செய்து கொள்வதற்குப் பொதுமக்களுக்கு உரிமையுண்டு. தேர்தல் காலங்களில் துண்டுப்பிரசுரங்களை வெளியிடவும்,  கருத்துக்களைக் கூறவும்,  அரசியல் கூட்டங்களை நடத்தவும் சுதந்திரம் காணப்படும். தேர்தலின்போது அரசியல் கட்சிகள் முன்வைக்கும் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கேற்ப (தாம் பதவிக்கு வந்தால் தமது ஆட்சியின்போது எம்முறைகளைப் பின்பற்றுவோம் என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்த முன்வைக்கும் திட்டம் தேர்தல் விஞ்ஞாபனமாகும்) மக்கள் தாம் விரும்பும் கட்சிக்கு வாக்களிக்கும் சுதந்திரம் காணப்படல் வேண்டும்.

ஜனநாயகம் எனப்படுவது பெரும்பான்மைக் கருத்தின்படி செயற்படும் ஓர் ஆட்சி முறையாகும். சர்வசன வாக்குரிமைப்படி பெரும்பான்மை மக்களின் விருப்பத்தைப் பெற்ற கட்சி அரசாங்கக் கட்சியாகும். அரசாங்கக் கட்சி பெற்ற விருப்பத்தைவிடக் குறைவான விருப்பத்தைப் பெற்ற கட்சி அல்லது கட்சிகள் எதிர்க்கட்சிகள் எனப்படும். அரசாங்கக் கட்சியும் எதிர்க்கட்சியும் மாறான கருத்துக்களை சகிக்கும் பண்பு அக்கருத்துக்கள் பற்றிச் சிந்தித்தல் ஆகியன ஜனநாயக நாட்டுக்கு முக்கிய பண்புகளாகும்.

அரசாங்கக் கட்சி எதிர்க்கட்சியின் கருத்துக்களைச் செவிமடுப்பதைப் போலவே எதிர்க்கட்சியும் பயனுறுதி வாய்ந்த கருத்துக்களையே முன் வைக்க வேண்டும். அரசாங்கக் கட்சியின் சகல திட்டங்களையும் எதிர்ப்பதுதான் எதிர்க்கட்சியின் கடமையாக இருத்தல் கூடாது. மக்களாட்சியில் தீர்மானங்கள் பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில் எடுக்கப்படுகின்றனவாயின் மற்றவர்களுடைய கருத்துக்கள்,  அபிப்பிராயங்கள் முதலியவற்றைச் செவிமடுத்துக் கவனித்துச் செயற்படுதல் அரசாங்கக் கட்சியினதும் எதிர்க்கட்சியினதும் கடப்பாடாகும்.

பொருளாதாரச் சுதந்திரம் எனும் போது நாட்டின் சட்டங்களுக்கு அமையவும், மற்றவர்களின் சுதந்திரத்தைப் பாதிக்காத வகையிலும் தாம் விரும்பிய எந்தவொரு தொழிலைச் செய்யவும் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் எவருக்கும் சுதந்திரம் உண்டு. உழைப்புக்கேற்ற ஊதியம் தொழிற் பாதுகாப்பு என்பனவும் இங்கு வழங்கப்படல் வேண்டும். தனிப்பட்ட சொத்துக்களையும் பணத்தைச் சேமிக்கவும் குடியாட்சியில் மக்களுக்கு சுதந்திரமுண்டு. (ஆனால்,  இவை ஏனையவர்களின் சுதந்திரத்தைப் பாதிக்காத வகையில் இருத்தல் வேண்டும்) சமய சுதந்திரம் எனும் போது விரும்பிய சமயத்தைப் பின்பற்றவும் பிரசாரம் செய்யவும் போதிக்கவும் குடிகளுக்கு சுதந்திரம் உண்டு.

மேற்குறித்த விடயங்கள் ஒரு ஜனநாயக நாட்டில் உறுதிப்படுத்தப் பட்டிருத்தல் வேண்டும். ஆனால் நவீன யுகத்தில் பெரும்பாலான நாடுகளில் இவை எழுத்தளவிலும் மேடைப் பேச்சளவிலும் மாத்திரமே உறுதிப்படுத்தப் பட்டிருப்பதை அவதானிக்கின்றோம்.குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் இப்போக்கினை சிறப்பாக அவதானிக்கலாம். இந்த நிலையே ஜனநாயகத்திற்கு எதிரான குறைபாடாகவும் சுட்டிக் காட்டப்படகின்றது.

ஜனநாயகம் வெற்றிகரமாகச் செயற்படுவதற்கு தேவையான நிலைமைகளாகப் பின்வருவனவற்றை அவதானிக்கலாம். மக்களிடையே மிக உயர்ந்த அளவில் நேர்மையும் பரஸ்பர மரியாதையும் இருத்தல் வேண்டும். மக்கள் தங்களுக்காக மட்டுமல்ல மற்றவர்களுக்காகவும் நீதியை நிலைநாட்ட முன்வர வேண்டும். சட்டத்திற்கு முன் அனைவரும் சமமானவராகக் கருத்தப்படல் வேண்டும். பெரும்பாலானோரின் கருத்துக்களை ஏற்பதோடு சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு மதிப்பளிக்கவும் வேண்டும்.

மக்கள் முழுச் சமுதாயத்தினதும் நலனில் அக்கறை காட்டுதல் வேண்டும். உறுதியானதும் ஆற்றலுடையதுமான பொதுசன அபிப்பிராயம் நிலவுதல் வேண்டும். பூரண அரசியல் சுதந்திரம்  இருத்தல் வேண்டும்

வளர்ச்சியடைந்ததொரு பொருளாதாரம் ஜனநாயகத்தின் செயற்பாட்டுக்கு அவசியமான மற்றுமொரு அம்சமாகும். நாட்டு மக்களுக்கிடையே ஒற்றுமை நிலவுதல் அவசியம்,  சிறப்பான தலைமைத்துவம் அமைதல் வேண்டும். ஒப்பீட்டு அளவில் வளர்ச்சி அடைந்த நாடுகளில் ஜனநாயம் சிறப்பாக இருப்பதற்கு மேற்குறிப்பிட்ட காரணிகளும் ஏதுவாக அமையலாம்.

அதே நேரம் ஜனநாயகம் தோல்வியடைவதற்கான காரணங்களாகப் பின்வருவனவற்றை கோட்பாட்டு ரீதியாக குறிப்பிடலாம்.

பாரம்பரிய அரசியற் சட்ட அமைப்பினுள் பயன்தரும் அரசியற் தலைமை உருவாகும் ஆற்றலின்மை,  பலவீனமுள்ள நிர்வாக அதிகாரிகளுக்கெதிரான எதிர்ச் செயல்கள்,  கடுமையான பொருளாதார இடர்பாடுகள் – உதாரணம் (வேலையில்லாப் பிரச்சினை,  அடிப்படை விடயங்களில் உடன்பாடின்மை, பொது விவகாரங்களில் மக்கள் அக்கறை காட்டாதிருத்தல்,  ஜனநாயகத்திற்கு அவசியமான நன்கு வளர்ச்சியடைந்த பாரம்பரியங்கள் இல்லாதிருத்தல் முக்களிடையே ஒழுக்கக்கேடும்,  பயனற்ற தன்மை பற்றிய உணர்ச்சியும் நம்பிக்கை இழந்த நிலையும் காணப்படுதல் போன்ற காரணிகளை இனங்காட்டலாம்.பொதுவாக மூன்றாம் உலக நாடுகளில் ஜனநாயகம் விமர்சனங்களுக்கு உற்பட மேற்குறிப்பிட்ட காரணிகளும் ஏதுவாகின்றன.

எவ்வாறாயினும் ஜனநாயம் என்பது கோட்பாட்டு ரீதியில் மிகவும் உயர்வானது. ஆனால் நடைமுறையில் ஆட்சியாளர்களின் அடாவடித்தனங்களாலும் மக்களின் அறிவீனம் காரணமாகவும் அது விமர்சனங்களுக்கு உற்படுவதை தவிர்க்க முடியாது உள்ளது. உலகளாவிய ரீதியில் 2009 ஆம் ஆண்டு கொண்டாடப்படுவது இரண்டாவது ‘சர்வதேச மக்களாட்சி நாள்” இத்தினத்தில் ஜனநாயக கோட்பாடுகள் பற்றிய எண்ணக்கருக்களை மக்கள் மத்தியில் தீவிரமாக விதைக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *