அமெரிக் காவைத் தளமாகக் கொண்டு செயற்பட்டுவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வி. உருத்திரகுமாரனுக்கு எதிராக அமெரிக்கா நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிரதான ஆயுத கொள்வனவாளர் கே.பி. என்று அழைக்கப்படும் கே. பத்மநாதன் அண்மையில் கைது செய்யப்பட்டதை அடுத்து தற்போது இயக்கத்தில் தீவிரமாக செயற்பட்டு வரும் அதியுயர் உறுப்பினராக உருத்திரகுமார் இருந்து வருகிறார் என்பதை இலங்கை சுட்டிக் காட்டியுள்ளது.
இது குறித்து வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கொஹன கருத்து தெரிவிக்கையில், தடை செய்யப்பட்ட ஒரு பயங்கரவாத இயக்கத்தின் உறுப்பினரும் பயங்கரவாதத்தை ஆதரித்து வருபவருமான உருத்திரகுமார் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை அமெரிக்கா உறுதிப்படுத்த வேண்டுமென தெரிவித்துள்ளார்.
அமெரிக்க சட்ட முறைமையில் உள்ள சில கட்டுப்பாடுகள் காரணமாக அந்த நாட்டு அரசாங்கம் உருத்திரகுமாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கமாட்டாது என்று சில வட்டாரங்கள் தெரிவித்திருந்தது பற்றி அபிப்பிராயம் கேட்டபோதே, சர்வதேச சட்டத்தின் கீழ் அமெரிக்கா தெரிவித்துள்ள உறுதிப்பாட்டுக்கு அமைய இந்த நடவடிக்கையை எடுக்க அது கடமைப்பட்டுள்ளது என்று கலாநிதி கொஹண தெரிவித்தார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அமெரிக்காவில் ஒரு தடை செய்யப்பட்ட இயக்கமாகும். அதன் மீதான தடையை நீக்குமாறு அண்மையில் அமெரிக்காவில் உள்ள குழு ஒன்று விடுத்த கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவிலுள்ள புலம்பெயர் தமிழர்கள் அமைப்பில் உருத்திரகுமார் ஒரு உறுப்பினராவார். இலங்கையில் வவுனியா முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் நிலைமை குறித்து உருத்திரகுமார் அண்மையில் தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க ராஜாங்க உதவிச் செயலாளர் ரொபேர்ட் ஓ பிளேக்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான ஆர்வலர்களையே ரொபேர்ட் பிளேக் சந்தித்தார் என்று தெரிவித்த இலங்கை அரசாங்கம் இந்த சந்திப்பு குறித்து கடும் ஆட்சேபனை தெரிவித்திருந்தது. இலங்கை விவகாரத்தில் ராஜாங்க திணைக்களத்தினதும் ரொபேர்ட் பிளேக்கினதும் தலையீடு குறித்து வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள இலங்கை தூதரகத்தின் மூலம் இலங்கை அரசாங்கம் இந்த ஆட்சேபனையை தெரிவித்திருந்தது.